கேரளாவின் வயநாடு பகுதியில் இன்று (07) ஏற்பட்ட மண்சரிவில் இருவர் உயிரிழந்தனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
இப்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெப்பாடிக்கு அருகிலுள்ள கல்லாடி பகுதியில் ஏற்பட்ட இந்த மண்சரிவு அங்கு நடைபெற்று வந்த சுரங்கப் பாதை கட்டுமானப் பணியைப் பாதித்ததில் பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இவர்களில் ஏழு பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக, முதல்வர் வி.டி. சதீசனை மேற்கோள்காட்டி பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தகவலின்படி, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் சுரங்கப் பாதை திட்டத்திற்காக அந்தத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில், வயநாடு மாவட்டத்தின் மனந்தவாடி மற்றும் வைதிரி பகுதிகளில் பலத்த மழை பதிவானதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு வானிலை ஆய்வு மையம் ‘சிவப்பு எச்சரிக்கை’ (red alert) விடுத்தது.
அண்டை மாவட்டமான கோழிக்கோட்டிற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன; தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, காவல்துறை, வனத்துறை ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பேரிடர் நடந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
அப்பகுதிக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் வசித்த குடும்பங்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக பிடிஐ (PTI) செய்தி வெளியிட்டுள்ளது
















