தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திங்களன்று (17) தனது ஆட்சியின் 100 நாட்கள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், “100 நாள் ஆட்சி – ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” என்ற கருப்பொருளின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் முதலீட்டு முயற்சிகளை முன்னிலைப்படுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசின் சாதனைகள் குறித்த விவரங்களை வெளியிட்ட முதலமைச்சர், பெண்களின் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
‘வெற்றி’ திறன் பயிற்சித் திட்டத்தின் மூலம் 12 லட்சம் மாணவர்கள் மற்றும் 1 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், ₹710 கோடி ஒதுக்கீட்டில், 15,414 பாடசாலைகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் கூடுதலாக 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
‘வெற்றி’ மடிக்கணினித் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க ₹2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குத் தலைக்கவசம் மற்றும் தண்ணீர் போத்தல்களுடன் கூடிய தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்கான ₹6,000 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடியை அரசு அறிவித்துள்ளதாக முதலமைச்சரின் அலுவலகம்தெரிவித்தது.
கரும்புக்கு தொன்னுக்கு ₹4,000 மற்றும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு (100 கிலோ கிராம்) ₹2,750 என்ற அளவிலான சிறப்பு ஊக்கத்தொகைகளும் இதில் அடங்கும்.
‘வெற்றி’ (Vettri) வீட்டுவசதித் திட்டத்திற்கு ₹3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; அதேவேளையில், குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம் மற்றும் கிராமப்புற இணைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ‘TN-VETTRI’ திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ₹6,000 கோடி வழங்கப்படும்.
‘வெற்றி 150’ திட்டம் 150 நாட்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது; மேலும், ‘வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்’ பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 5 ஆடுகளை வழங்குகிறது.
கல்வி நிலையங்கள், கோயில்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் அமைந்திருந்த 717 மதுபானக் கடைகளையும் அரசு மூடியது.
நிர்வாகம் குறித்துக் குறிப்பிடுகையில், விரைவான திட்ட அனுமதி மற்றும் நேரில் செல்லத் தேவையில்லாத சொத்துப் பதிவு முறை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் “நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை” உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் அலுவலகம் தெரிவித்தது.
இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு 200 யூனிட்கள் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
மக்களின் மனசாட்சிக்கு மதிப்பளிக்கும் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவதில் அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த 100 நாள் அறிக்கை பிரதிபலிக்கிறது என்று முதலமைச்சர் கூறினார்.


















