அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில் உள்ள நக்ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு, இன்று (5) நண்பகல் 12 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
நக்ஷிவன் தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள விமான நிலைய முனையக் கட்டிடம் ஒன்றின் மீது ஒரு ட்ரோன் மோதியுள்ளதாகவும், மற்றொன்று ஷகராபாத் கிராமத்திலுள்ள பாடசாலைக் கட்டிடம் ஒன்றிற்கு அருகில் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் அஸர்பைஜான் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதுடன், விமான நிலையத்திற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
நக்ஷிவன் பிராந்தியம் ஈரான் மற்றும் துருக்கி நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
இப்பிரந்தியத்திற்கு ஆர்மீனியாவும் உரிமை கோருவதால், அமெரிக்காவின் தலையீட்டுடன் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது அமைதி ஒப்பந்தம் ஒன்று நடைமுறையில் உள்ளது.
அஸர்பைஜான் நாடு, இஸ்ரேலின் உளவுத் தளமாகச் செயற்படுவதாக ஈரான் நீண்டகாலமாக அசேரி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது















