”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படும்” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் இடம்பெற்ற ஜக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பது இன்று மிகவும் தெளிவாக தெரிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியை தவிர இன்று அனைத்து கட்சிகளும் பிளவடைந்துள்ளன.
ஐக்கிய தேசியக்கட்சி இன்று இல்லாமல் போயுள்ளது. மொட்டுக்கட்சி 4 ஆக பிளவடைந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 4 ஆக பிளவடைந்துள்ளது.இடதுசாரிகளான தேசிய மக்கள் சக்தி போராட்டகள குழுவினர் போன்றவர்களும் இரண்டாக பிரிந்துள்ளனர்.
இன்று இந்த நாட்டில் இன மத வேறுபாடின்றி அனைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியை வெற்றிபெற செய்வதற்கு ஒன்றிணைந்துள்ளனர்.
தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வெற்றியானது சூரிய உதயமும் சந்திர அஸ்தமனமும் போன்ற நிலையானதாகும்.
நாட்டு மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று வேளை உணவை உட்கொள்வதற்கு சிரமப்படுகின்றனர். நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் இன்று பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் பேசுகின்றனர்.நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு மக்கள் மீதே சுமைகளை அதிகரித்தனர்.
பொருட்களின் விலையை அதிகரித்தனர். வரிக்கொள்கையினை அதிகரித்தனர்.எனவே தற்போதைய அரசாங்கத்தினர் மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவே அரசாங்கத்தை வழிநடத்தி செல்கின்றனர்.
நாம் இந்த இடத்தில் ஒரு வாக்குறுதியை வழங்குகின்றோம். அதாவது ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஆட்சியில் மிகவும் குறுகிய காலத்திற்குள் அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படும்.
மக்களுக்கு நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடியவாறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்” இவ்வாறு லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.