ஈரானுடன் நடைபெற்று வரும் போரில் இதுவரை கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.
இதேவேளை, காணாமல் போயிருந்த இரண்டு வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து தாக்குதலை தொடங்கின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகின்றது.
மறுபுறம், ஈரானிய ‘செம்பிறை’ (Red Crescent) அமைப்பின் தகவல்படி, ஈரானில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் நடைபெற்ற தாக்குதல்களில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப்போர் ஈரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான “கடைசி மற்றும் சிறந்த வாய்ப்பு” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த இராணுவ நடவடிக்கை 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கலாம் என்றும், தேவைப்பட்டால் இன்னும் நீண்ட காலத்திற்குத் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவசியம் ஏற்பட்டால் ஈரானுக்குள் அமெரிக்கத் தரைப்படையினரை (Ground Troops) அனுப்பவும் தயங்கப்போவதில்லை என அவர் எச்சரித்துள்ளார்.
நேற்று காலை குவைத்தில் அமெரிக்காவின் மூன்று F-15 போர் விமானங்கள் அந்நாட்டு இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இது ஒரு “தவறுதலான தாக்குதல்” (Friendly fire) என்று இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன் (Drone) தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் தூதரகக் கட்டிடத்திற்குச் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகச் சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













