இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகள் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒற்றுமையுடன் செயற்படுவதற்கு இணக்கம் காட்டியுள்ளன.
இதன்படி, இன்று பிற்பகல் ஒரு மணிக்கு குறித்த தமிழ் கட்சிகள் கொழும்பில் சந்தித்து, முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் குறைகளையும் நிறைகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவும் கூட்டாகவும் முன்வைப்பதற்கான பொதுவான மேடையொன்றை உருவாக்குவதே இந்தச் சந்திப்பின் நோக்கம் என தெரிவித்த அவர் தற்போதைய அரசாங்கம் நாட்டின் பல முக்கிய விவகாரங்களில் அலட்சியப் போக்குடன் செயற்படுவதாகச் சுட்டிக்காட்டினார் .
மேலும், ரவூப் ஹக்கீம், மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அரசாங்கத்திற்கு முறையான அழுத்தங்களை வழங்க இந்த கூட்டு அரசியல் முயற்சி மிகவும் அவசியமானது என்றார்.
தமிழ் பேசும் கட்சிகளின் இந்த ஒற்றுமை முயற்சி காலத்தின் கட்டாயத் தேவை என்று சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், இத்தகைய அரசியல் முனைப்பானது சமூகங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.












