பத்தரமுல்லையில் வேறு நபர்களுக்கு சொந்தமான கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்த மூன்று பேரின் கடவுச்சீட்டுகள் அவர்களிடம் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இருவரும் 63 மற்றும் 68 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் வத்தளை மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்று(வியாழக்கிழமை) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.