மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நீக்கப்படும் வரை, சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) திறக்கப் போவதில்லை என ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா தனது “அதிகப்படியான” கோரிக்கைகளைக் கைவிட மறுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சயீத் காதிப்சாதே, அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் எந்தத் திகதியும் குறிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஒரு முறையான உடன்படிக்கை எட்டப்படும் வரை ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை தொடரும் எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதேவேளை, “ஈரானின் மிரட்டல்களுக்கு (Blackmail) வாஷிங்டன் ஒருபோதும் பணியாது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மறுபுறம், லெபனானில் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இஸ்ரேல் தெற்கு லெபனான் மீது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.
காஸாவில் ஏற்படுத்தியது போன்ற ஒரு “மஞ்சள் கோடு” (Yellow line) எல்லையை லெபனானிலும் இஸ்ரேல் நிறுவியுள்ளது.
இது போர்நிறுத்த உடன்படிக்கையைச் சிதைக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
லெபனானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஹெஸ்புல்லாவே காரணம் எனப் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் குற்றம் சுமத்தியுள்ளார்.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை ஹெஸ்புல்லா அமைப்பு முற்றாக மறுத்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கும் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் மற்றும் லெபனான் எல்லைப் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியம் மீண்டும் ஒரு போர்க்களமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.














