அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர்நிறுத்தத்தை நீடித்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியிருப்பதற்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும், துறைமுக முடக்கமுமே காரணம் என ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இது குறித்துத் தெரிவிக்கையில், “ஈரான் எப்போதுமே பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை மூலம் தீர்வுகாணவே விரும்புகிறது. ஆனால், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறுவதுடன், எமது நாட்டின் துறைமுகங்களை முடக்கி (Blockade) அச்சுறுத்தல் விடுப்பது பேச்சுவார்த்தைகளுக்குப் பெரும் தடையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் பேச்சுவார்த்தை குறித்துப் பேசப்பட்டாலும், கடற்பரப்பில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC) இரண்டு வெளிநாட்டுப் படகுகளைச் சிறைபிடித்ததுடன், மூன்றாவது கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
ஈரானியத் துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டுள்ளதால், அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் அத்தியாவசிய விநியோகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், “போர்நிறுத்த நீடிப்பு தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப் எந்தவொரு இறுதிக் காலக்கெடுவையும் (Deadline) நிர்ணயிக்கவில்லை,
இது குறித்த அடுத்தகட்ட முடிவை ஜனாதிபதி மட்டுமே எடுப்பார்” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
போர் தொடங்கி 55 நாட்கள் கடந்துள்ள நிலையில், அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவத் தடைகள் ஒருபுறமும், ஈரானின் பதிலடி நடவடிக்கைகள் மறுபுறமுமாக மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்ந்து பதற்றத்திலேயே காணப்படுகிறது.













