கடந்த வார இறுதியில் நடைபெற்ற பரஸ்பர தாக்குதல்களுக்குப் பின்னர் அமைதியை நோக்கிய தூதரக நடவடிக்கையாக, அமெரிக்க மற்றும் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் கட்டாரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தைகளின் ஒரு சுற்றை புதன்கிழமையன்று (01) நிறைவு செய்தனர்.
ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்தின் கீழ் உள்ள மிக முக்கியமான இரண்டு விவகாரங்களான ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மற்றும் ஈரானின் முடக்கப்பட்ட நிதியை விடுவித்தல் ஆகியவை குறித்து விவாதிக்க, இரு நாடுகளின் பேச்சுவார்த்தைக் குழுக்களும் டோஹாவில் இரண்டு நாட்கள் செலவிட்டதாக இச்சம்பவம் தொடர்பான தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூலை 9-ஆம் திகதி அடக்கம் செய்யப்படவுள்ள ஈரானின் மறைந்த உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலங்களுக்குப் பின்னர் அடுத்த கூட்டம் நடைபெறும் என்று கட்டார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் போரை நிறுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான விவகாரங்களில் டோஹா பேச்சுவார்த்தைகள் நேர்மறையான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவுகளின் அடிப்படையில் இவை முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வொஷிங்டனில், ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் மீதான சாத்தியமான கட்டுப்பாடுகள் குறித்து இரு தரப்பினரும் முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
பெப்ரவரி மாதம் இஸ்ரேலுடன் இணைந்து அவர் போரைத் தொடங்கியதற்கான முக்கியக் காரணமும் இதுவேயாகும்.
ஈரானை அணு ஆயுதங்களற்ற நாடாக மாற்றும் நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இருப்பினும், தொழில்நுட்ப ரீதியிலான அந்தப் பேச்சுவார்த்தைகளில் அணுசக்தித் திட்டம் குறித்த விவகாரம் இடம்பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விவகாரம் குறித்துப் பின்னர் ஆலோசிக்கப்படும் என்று அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கூறினார்.
அதேநேரம், அமெரிக்க மற்றும் ஈரானியப் பேச்சுவார்த்தைக் குழுவினர், கட்டார் மற்றும் பாகிஸ்தான் தரப்பு மத்தியஸ்தர்களுடன் தனித்தனியாகச் சந்திப்புகளை நடத்தியதாகக் கட்டார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.















