பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானியத் தூதுக்குழுவின் தலைவர் மொஹமட் பாகர் கலிபாப் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானியத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப், அமெரிக்கா மீது தமக்குத் துளியும் நம்பிக்கையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ‘X’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்கா எமது நம்பிக்கையைப் பெற முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஈரான் மிகுந்த நல்லெண்ணத்துடனும், உடன்பாட்டுக்கு வரும் விருப்பத்துடனும் இருந்ததாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், கடந்த காலங்களில் இடம்பெற்ற இரண்டு போர்களின் கசப்பான அனுபவங்கள் காரணமாக, அமெரிக்கா தலைமையிலான எதிர்த் தரப்பினர் மீது தமக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானியத் தூதுக்குழு இணக்கப்பாட்டை நோக்கிப் பல முயற்சிகளை முன்னெடுத்த போதிலும், எதிர்த் தரப்பினர் ஈரானின் நம்பிக்கையைப் பெறுவதில் தோல்வியடைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்துள்ளன.
ஈரானின் நாற்பது நாள் தேசிய தற்காப்புச் சாதனைகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் இருந்து ஒரு கணம் கூடப் பின்வாங்கப் போவதில்லை என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் தீவிரமான முறையில் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்த பாகிஸ்தான் அரசுக்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்புகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டி வரும் நிலையில், சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.















