Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாக்கடை அரசியலில் மூழ்கிப்போகும் எதிர்பார்ப்புக்கள்

In இன்றைய பார்வை
Updated: 11:59 GMT, Jan 28, 2018 | Published: 11:38 GMT, Jan 28, 2018 |
0 Comments
1370
This post was written by : Varshini

“அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை எதிரியும் இல்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவான 96 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தனித்து ஆட்சியமைக்கத் தயார் தயார்” – இரத்தினபுரியில் ஜனவரி 27ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரை.

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை” – கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் ஜனவரி 26ஆம் திகதி நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி

“என்னுடைய பதவிக்காலம் எப்போது முடிவடைகின்றது எனப் பலரும் அறிய விரும்புகின்றனர். அவர்களுக்கு என்னிடம் பதிலொன்றுள்ளது. ஊழல் அரசியல்வாதிகளும் கொலையாளிகளும் கள்வர்களும் நீதியின் முன்பாகக் கொண்டுவரப்படும் நாளிலேயே என்னுடைய பதவிக்காலம் நிறைவடைகின்றது” – தனது டுவிட்டர் சமூகத்தளத்தில் ஜனவரி 18ஆம் திகதி ஜனாதிபதி

கடந்த சில வாரங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் செயற்பாடுகளையும் உற்று நோக்குகின்றபோது வித்தியாசமான போக்கு எதிரொலிப்பதை அரசியல் களத்தை பின்தொடர்பவர்களால் மட்டுமன்றி அவ்வப்போது செய்திகளைப் பார்க்கின்றவர்களால்கூட உணர்ந்துகொள்ளமுடியும்.

ஜனாதிபதியின் தொனியிலும் போக்கிலும் ஏன் இந்த மாற்றம் என்று பலரும் அங்கலாய்ப்பது இயல்பானதே! 2015ஆம் ஆண்டில் உயிரச்சுறுத்தலின் மத்தியில் நிகழ்த்தப்பட்ட ஆட்சிமாற்றத்தால் ஏற்பட்ட முக்கியமான எதிர்பார்ப்புக்கள் கானல் நீராகப் போய்விடுமா என்பதே அங்கலாய்ப்பிற்கான முக்கிய காரணமாகும்.

பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களை இலக்காகக்கொண்டே ஜனாதிபதி இவ்வாறான அதிரடிக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என்பது பரவலான அபிப்பிராயமாக இருந்துவருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக மைத்திரி மற்றும் மஹிந்த அணிகளாக பிளவுபட்டுக்கிடக்கும் நிலையில், ஐக்கிய தேசியக்கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் முதலாவது இடத்தினைப் பெறும் என்ற நிலையில், எப்படிப்பட்டாயினும் தனது அணியின் வாக்கு எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டுவிடவேண்டும் என்ற முனைப்போடு ஜனாதிபதி சிறிசேன கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாகவே அரசியல் விமர்சகர்களில் சிலர் கூறுகின்றனர்.

உள்ளூராட்சித் தேர்தலில் மைத்திரியின் அணியை விடவும் மஹிந்த ராஜபக்ஷவை தலைவராக வரிந்துகட்டிக்கொண்டு மலர்மொட்டுச் சின்னத்தில் களமிறங்கும் தரப்பினர் இரண்டாவது இடத்தைப் பெற்றுவிட்டால் மைத்திரி மீதான அழுத்தங்கள் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புண்டு.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகவும் செயற்படுகின்ற நிலையிலேயே அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மஹிந்த அணியின் பக்கமாக சாய்கின்றபோது, தேர்தலூடாக மஹிந்தவின் பலம் உறுதிசெய்யப்படுமிடத்து மேலும் அதிகமானோர் சிறிசேனவின் பக்கத்திலிருந்து மஹிந்த பக்கமாக வெளிப்படையாக தாவத்தொடங்கிவிடுவர்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்காத நிலையிலும் உயர் நீதிமன்றம் தற்போதைய ஜனாதிபதிப் பதவிக்காலம் ஐந்துவருடங்கள் மாத்திரமே எனத் தெளிவுபடுத்தியுள்ள நிலையிலும் ஜனாதிபதி சிறிசேன வெறுமனே நொண்டி வாத்து போன்றதொரு ஜனாதிபதியாகவே இருக்க நேரிடும் என்பதால் அவரது கட்சியினரே அவரைப் பொருட்படுத்தாமல் நடந்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம்.

ஜனாதிபதிப் பதவியை 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி ஏற்றபின்னர் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையின் போது தாம் மீண்டும் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்ததன் மூலம் பல்வேறு மட்டங்களிலிருந்தும் பெருந்திரளானவர்களை தம்பால் திரும்பிப்பார்க்கவைத்த ஜனாதிபதி சிறிசேன கடந்த சிலவாரகாலமாக செயற்படும் விதமும் தெரிவிக்கும் கருத்துக்களும் அவர்மீது கணிசமானவர்கள் மத்தியில் வெறுப்பைத் தோற்றுவிக்க வைப்பதாகவும் அனேகமானவர்கள் மத்தியில் அவரது நோக்கம் குறித்த சந்தேகத்தை எழுப்புவதாகவும் அமைந்துள்ளன.

மீண்டுமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை பதவியில் தொடர எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் பதவியேற்ற ஆரம்பகாலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசிய ஜனாதிபதி இன்றோ தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் அரசியலில் இருப்பேன். ஊழல் அரசியல்வாதிகளை நீதிக்கு முன்கொண்டுவந்த நாளிலேயே தமது பதவிக்காலம் முடிவடைகின்றது எனக் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர் தற்போதைய ஐந்து வருடங்களுக்கு மேலாகவும் அதிகாரத்தில் இருக்க ஆசைப்படுவதை துலாம்பரமாக்குகின்றது.

“அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவான 96 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தனித்து ஆட்சியமைக்கத்தயார்” என நேற்று இரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூறிய கூற்றானது உள்ளூராட்சித் தேர்தலை இலக்காக் கொண்ட பிரசாரம் அல்ல என்பதும் மாறாக உண்மையாகவே ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகித் தனிவழி செல்வதற்கு தயாராகிவிட்டதனையே உணர்த்திநிற்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பினரை நேரடியாகத் தாக்கி அதிலும் மஹிந்தவின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எதனையும் இதுவரையில் எடுக்காமல் அனைத்து தவறுகளுக்கும் ஐ.தே.க.வே பொறுப்பேற்க வேண்டுமென, இதே பாங்கில் கருத்துக்களை வெளியிடுவதும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் அக்கட்சியுடனான விரிசலை அதிகரிக்கவே வழிகோலும். ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட நல்லாட்சி அரசாங்க கூட்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவிற்கு வந்துவிட்ட நிலையில் இரு கட்சிகளையும் தொடர்ந்தும் அரசாங்கத்தில் ஒன்றிணைத்து வைத்திருப்பதற்கான எழுத்துமூல உறுதிப்பாடு இல்லை என்றாகிவிட்ட நிலையில் தேர்தலின் பின்னர் அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன உட்பட சில முக்கிஸ்தர்கள் கூறிய கருத்துக்கள் நிஜமாகவதற்கு சாத்தியமில்லை என்பதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலமாக வெளிப்படுத்திவரும் ஆக்ரோஷக் கருத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

அரசியல் என்பது ஒரு சாக்கடை. அதற்குள் ஒரு முறை மூழ்கிவிட்டால் அவர்களை நம்பிவிடக்கூடாது என்ற கசப்பான உண்மையை இலங்கை வாக்காளர்கள் மீண்டுமாக உணர்ந்துகொள்ளும் துர்ப்பாக்கிய நிலையின் விளிம்பில் நாம் நின்றுகொண்டிருக்கின்றோம். படுகொலைகளைப் புரிந்தவர்கள் சர்வாதிகாரிகள் போன்று ஆட்சி செய்தனர். நாட்டை மோசமாகக் கொள்ளையடித்தனர். எதிர்காலச் சந்ததியினரை அழிவுக்குள் தள்ளுகின்றனர் என அடுக்கடுக்காக ராஜபக்ஷ தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று இன்று பதவியைத் தக்கவைப்பதற்காக அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக கூறும் கருத்துக்களைப் பார்க்கின்றபோது மனசாட்சியுள்ள குடிமக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவர் என்பது திண்ணமாகும்.

பதவியை பொருட்டாகக் கருதவில்லை. அதிகாரத்தை தூக்கியெறியத் தயார் என்ற கருத்துக்களும் எளிமையான செயற்பாடுகளுமே ஜனாதிபதி சிறிசேனவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவைக் கொண்டுவரக் காரணமாக இருந்தன. ஆனால் அதிகாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கும் ஆட்சியில் நிலைத்திருப்பதற்கும் அவர் தீர்மானித்தால் மக்களிடமிருந்து அந்நியப்படும் ஏதுநிலை ஏற்படும். ஆகமொத்தம் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக இவரும் வழமையான அரசியல்வாதிதான் என்பதை உறுதிசெய்வதாகவே ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றனவென்றால் மிகையல்ல.

நிதர்ஷனன்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg