முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்! – சார்ள்ஸ்
In ஆசிரியர் தெரிவு April 24, 2019 5:31 pm GMT 0 Comments 2714 by : Litharsan

முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனேயே இலங்கையில் தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை வளர்த்தது முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் எனக் கூற இந்த சபையில் யாருக்கும் தைரியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற சபை இன்று எதற்காக கூடியது என்று தெரியாமல், நான் பிழை செய்யவில்லை, மற்றவர்தான் பிழை செய்தார் என சாக்கு போக்குகளை கூறி சபையை திசை திருப்ப பலர் முனைகின்றனர்.
எனவே இவற்றை தவிர்த்துவிட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதியாவதற்காக, பிரதமராவதற்காக குற்றவாளிகளை தப்பிக்கச் செய்யும் மோசமான அரசியலை யாரும் முன்னெடுக்க வேண்டாம்.
இங்கிருக்கின்ற சில அரசியல் தலைவர்கள் இந்த விவகாரங்களோடு தொடர்புபட்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்களை நல்லவர்கள் போல காண்பிக்க நினைக்கிறார்கள். இவர்கள் சட்டத்தின் முன் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையை பயங்கரவாதி என அடையாப்படுத்தியவர்கள் இன்று இதற்கு என்ன கூறுகிறார்கள்.
இவ்வாறான நிலையில் கொழும்பில் குண்டு தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியது யார்? அத்துடன் இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை நடத்த மாட்டார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.