லையன் எயார் விமான விபத்தில் முக்கிய திருப்பம்!
இந்தோனேசியாவில் விபத்திற்குள்ளான லையன் எயார் விமானத்தின் கறுப்புப் பெட்டி குரல்பதிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்ட குறித்த கறுப்புப் பெட்டி, விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பிரதான தடயமாக காணப்படுகின்றது.
கடந்த ஒக்டோபர் மாதம் 189 பயணிகளுடன் பயணித்த லையன் எயார் விமானம், ஜகார்த்தா தீவில் விபத்திற்குள்ளாகியது.
தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரியிருந்தார். எனினும், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒரு சில நிமிடங்களில் விமானம் விபத்திற்குள்ளானது.
இந்நிலையில், ஜாவா கடல் தரைக்கு அடியில் 8 மீற்றல் ஆழத்தில் இந்த கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனேசிய கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கறுப்புப் பெட்டியின் குரல்பதிவை அடிப்படையாகக் கொண்டு, விசாரணையை முன்னெடுக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே முதலாவது கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட போதும், அதன் சமிக்ஞைகள் பல செயலிழந்திருந்தன. எவ்வாறாயினும், கறுப்புப் பெட்டிகளிலுள்ள தகவல்களை முழுமையாக பெறுவதற்கு 6 மாதங்கள் செல்லுமென நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
விமானிக்கும் விமான கட்டுப்பாட்டு அறைக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலே, குறித்த விபத்திற்கான விடையாக அமையுமென நம்பப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.