Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியலமைப்பு வரைபாகவே இருக்குமா? அரசியலமைப்பாக மலருமா?

In இன்றைய பார்வை
Updated: 10:17 GMT, Sep 22, 2017 | Published: 10:08 GMT, Sep 22, 2017 |
0 Comments
1483
This post was written by : Vithushagan

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தபோது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதியான புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தி தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதும்,நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்ததை பலமிக்கதாக்குவதும், தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதுமாகும் என்று கூறியிருந்தனர்.

நல்லாட்சி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கின்ற இவ்வேளையில் இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்புக்கான வழி நடத்தல் குழுவின் அறிக்கை வரைபை செப்ரெம்பர் 21ஆம் திகதி அரசியலமைப்புப் பேரவைக்கு சமர்ப்பித்திருக்கின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான வழிநடத்தல் குழுவில் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்துடன் மாற்றப்பட்டது.வழிநடத்தல் குழுவும், அதற்கு வரைபு ஆலோசனைகளை வழங்குவதற்காக 6 உபகுழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இது தவிரவும்,அரசியல் தீர்வு தொடர்பாகவும், புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கம் தொடர்பாகவும், நாட்டு மக்களின் அபிப்ராயங்களை தெரிந்து கொள்வதற்காக அமைக்கப்பட்ட கருத்தறியும் குழுவின் அறிக்கையையும் வழிநடத்தல் குழு ஆய்வு செய்தது.

வழி நடத்தல் குழுவில் பிரதமர் உள்பட 28 பேர் உறுப்பினர்களாக இருந்தபோதும், வழி நடத்தல் குழுக் கூட்டங்களில் 6 தொடக்கம் 12 பேர் மட்டுமே அமர்வுகளில் முழுமையாக பங்குகொண்டிருந்தார்கள். இதுபற்றி இதே பத்தியின் பக்கத்தில் நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

வடிவேலுவின் திரைப்பட நகைச்சுவையைப்போல்,’வரும் ஆனால் வராது’ என்பது போலவே புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அன்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறியதாக வெளியான செய்தியும்,’தீர்வு வரும், வராமலும் போகலாம்’ என்றவிதமாகவே நிலைமை உள்ளது.

தீர்வு வருமா? என்பதை தீர்மானிக்க முடியாத நிலையிலேயே கட்சித் தலைவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு வடக்கு, கிழக்குத் தமிழ்த் தலைமையான டக்ளஸ் தேவானந்தா புதிய அரசியலமைப்புக் குறித்து பதிலளிக்கும்போது,’புதிய அரசியலமைப்பு 13ஆவது திருத்தத்திற்கு மேலானதாக இருந்தால் அதை வரவேற்போம்’ என்று கூறியிருக்கின்றார்.

புதிய அரசிலமைப்பு சபைக்கு கொண்டுவரப்படுமா? அப்படிக் கொண்டுவரப்பட்டால் அதைத் தடைகள் ஏதுமின்றி நிறைவேற்றிக்கொள்ள முடியுமா? என்பது எல்லோருக்கும் கேள்விக்குரிய ஒருவிடயம்தான்.

அந்தக் கேள்வியும், சந்தேகமும் ஒருபுறமிருந்தாலும்,புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான அறிக்கை வரைபு தற்போது அரசியலமைப்பு பேரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மிகச் சுருக்கமாக ஆராய்வதும், தெரிந்து வைத்திருப்பதும்,எதிர்காலத்தில் நம்மைச் சுற்றி நடக்கப்போகின்ற அரசியல் நிகழ்வுகளையும், விவாதங்களையும் புரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும்.

புதிய அரசியலமைப்பு வரைபில்,இலங்கையின் ஆட்சி, அதிகாரங்களையும், பரிபாலனங்களையும் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் ஏற்கனவே அரசியல் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரதிபலிப்புக்களையே அதிகமாகக் கணமுடிகின்றது.

அதாவது மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதும்,இதுவரை மத்திய அரசின் மேற்பார்வையில் இருந்த உள்ளுராட்சி சபைகளின் செயற்படுத்து அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திக்கும் மாகாணத்திற்கும் நாடாளுமன்றத்திற்கு இணையான இரண்டாம் சபையை ஏற்படுத்துவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 13ஆவது திருத்தத்தில் மாகாணங்கள் மீது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கொண்டிருந்த அதிகாரம் இனிமேல் இரண்டாம் சபை ஊடாகவே கையாளப்படும் என்பது புதிய விடயமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற சிறுபான்மை மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்துக்கே முன்னுரிமை என்றும், பௌத்த மதத்தை பேணிப்பாதுகாக்கவும்,வளர்க்கவும் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அரசியல் சாசனமே வலியுறுத்துகின்றது.

மொழிக்கொள்கையும் ஏற்கனவே இருந்த அதே சொற்பிரயோகங்களையே பிரதி செய்துள்ளது. முக்கிய அம்சமாக எதிர்காலத்தில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தப்போகும் அம்சமானது,நாட்டின் ஆட்சித் தன்மையானது ‘ஏக்கிய ராஜிய’ என்று சிங்களத்தில் குறிக்கப்பட்டாலும்,தமிழிலில்’ஒருமித்த நாடு’ என்று கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஏக்கிய ராஜிய என்பதை சிங்களத்தில் ‘ ஒற்றையாட்சி| என்றே குறிப்பிடுகின்றது. இலங்கை ஒற்றையாட்சித் தன்மை உடைய நாடு என்பது,இலங்கை ஆட்சியமைப்பின் ஆரம்பகால அர்த்தமாகும்,இதுவரை இலங்கையின் ஏக்கிய ராஜிய என்ற ஒற்றையாட்சித் தன்மையை ஏற்றுக்கொண்டுதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறைமைக்கு விசுவாசப்பிரமாணம் செய்து கொண்டு பதவி ஏற்கின்றார்கள்.

இலங்கையின் ஒற்றையாட்சி கோட்பாட்டுக்கு விசுவாசமாக சத்தியபிரமானம் எடுத்துக்கொள்வதை ஏற்கமுடியாது என்பதாலேயே புலிகள் தேர்தல் முறைமையையும், நாடாளுமன்றப் பதவிகள் வகிப்பதையும் நிராகரித்தார்கள் என்பதே வரலாறாகும். ஏக்கிய ராஜிய என்ற ஒற்றையாட்சியின் கோட்பாடானது,இலங்கை நாடு பிரிக்கப்பட முடியாததாகும் என்பதை வலியுறுத்துகின்றது.

அதேபோல் மாகாணசபை அல்லது ஏனைய அதிகாரசபைகளோ இலங்கையின் ஆள்புலத்தின் எந்தவொரு பகுதியையும் தனிநாடொன்றாகப் பிரகடனப்படுத்தவோ அல்லது தனியாகப் பிரித்து வாதாடவோ முடியாது என்பதையும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 13ஆவது திருத்தச் சட்டத்தில் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தவாறான,இரண்டு மாகாணங்கள் அவை நிலத் தொடர்பற்றதாக இருந்தாலும் அந்த மக்களின் இணக்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான ஏற்பாடு புதிய வரைபில் உள்ளடக்கப்படவில்லை.

இதனூடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகளான,இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீகத் தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதும்,சமஷ;டி அடிப்படையில் அதிகாரம் பகிரப்பட்டு தனிநாட்டுக்கு ஒப்பான அதாவது, பகிரப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படமுடியாததுமான தீர்வு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதும் புதிய அரசியலமைப்பு வரைபில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமது அரசியல் அபிலாiஷகளை அடைந்து கொள்வதற்காக தமிழ் மக்கள் நடத்திய சத்தியாக்கிரக சாத்வீகப் போராட்டங்களும். ஆயுதம் ஏந்திய ஆயுத வழிமுறைப்போராட்டமும் அதனால் தமது உயிர்களையும்,பூர்வீக உடமைகளையும், வாழ்வியல் வளங்களையும் இழந்ததும்,வீணாகிப்போய்விட்டது.

அன்மையில் மக்கள் சந்திப்பொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உரையாற்றியபோது,’போராட்டம் நடத்தி என்னத்தை கிழித்தீர்கள்’என்று கேள்வி எழுப்பியதாக வெளியாகியிருந்த செய்தியின் யதார்த்தத்தை இப்போது புரிந்து கொள்ளமுடிகின்றது.

இலங்கையில் அரசியல் தீர்வென்பது தனிநாடாக ஒருபோதும் அமையமுடியாது என்பது வெளிப்படையாகும். அதற்கு சிங்களவர்கள் இணங்க மாட்டார்கள் என்பது ஒருபுறமாக இருந்தாலும்,பிராந்திய மற்றும் பூகோள நாடுகளும் இதற்கு இணங்கப்போவதில்லை என்பது வரலாறு கற்றுத் தந்திருக்கும் பாடமாகும்.

இந்த நிலையில் தனிநாட்டுக்கு ஒப்பான தீர்வு என்று பிடிவாதம் பிடித்து இருப்பதையும் அழித்துக்கொள்ளாமல்,ஐக்கிய இலங்கைக்குள் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு அதை ஆளுமையோடும்,சமூகத்தின் கூட்டுப்பொறுப்புடனும் நிர்வகிப்பதே நடக்கக்கூடியதாகும். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டவர்கள் ஒற்றையாட்சியா? சமஷ;டியா? என்று வாதிட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை.

ஆனால் சிங்கள மக்கள் ஒற்றையாட்சி என்று புரிந்து கொண்டதை, தமிழ் மக்கள் ஒருமித்த நாடு என்று புரிந்துகொண்டு இருக்கின்றார்களே என்பதை எண்ணிப்பார்க்கும்போதுதான்,வரலாற்றில் தமிழ்; மக்களை தமிழ்த் தலைமைகள் மீண்டும் ஒருதடவை ஏமாற்றியிருக்கின்றார்கள் என்று நமது தலைமுறை சிரிக்கும்.

-ஈழத்துக் கதிரவன்-

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg