Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வங்கப்புலிகளிடம் வாங்கிக்கட்டிய சிங்கக்குட்டிகள்

In கிாிக்கட்
Updated: 14:20 GMT, Jan 19, 2018 | Published: 14:20 GMT, Jan 19, 2018 |
0 Comments
1590
This post was written by : Anojkiyan

2017இல் அடைந்த பெருந்தோல்விகளுக்குப்பின்னர் 2018இல் வெற்றிப்பாதைக்கு இலங்கை திரும்பும் என்ற எதிர்பார்ப்புகள் முதலிரு போட்டிகளிலேயே தவிடுபொடியாகியுள்ளமை இரசிகர்களை ஆழ்ந்த கவலைக்குள் ஆழ்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

புதிய பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க, புதிய அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், புதிய வீரர்கள் என முப்படையுடன் பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை அணி, கத்துக்குட்டி அணிகளான சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளிடம் அவமானத் தோல்வியை சந்தித்திருப்பது கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலேயே வியப்பை உண்டுபண்ணியிருக்கும்.

கடந்த ஆண்டு சொந்த மண்ணில் இலங்கை அணியை தலைகுனிய வைத்து, சர்வதேச அரங்கில் தங்கள் அணியை தலைநிமிரச் செய்த சிம்பாப்வே அணியை பதம் பார்க்க எண்ணிய இலங்கை அணி, முதல் போட்டியிலேயே 12 ஓட்டங்களால் மீண்டும் அவமானத் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

பதுங்கி பாய காத்திருந்த இலங்கை அணியை துவம்சம் செய்த சிம்பாப்வே அணி, மீண்டும் இலங்கைக்கு தோல்வியை பரிசளித்தமை இலங்கை இரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது.

அன்று, ஆண்டின் முதல் போட்டியே தோல்வி என இரசிகர்களால் காரசாரமாக விமர்சிக்கப்பட்ட போதும் இனி தோல்வி நீளாது என தலைவர் மெத்தியூஸ் கூறியிருந்தார். இன்று சந்தித்த தோல்விக்கு மெத்தியுஸ் உள்ளிட்டவர்கள் என்ன பதில் வைத்துள்ளனர்?

கடும் நெருக்கடிக்கும் எதிர்பார்ப்புக்கும் மத்தியில் இன்று (வெள்ளிக்கிழமை) டாக்கா மைதானத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி, எந்த போராட்டமும் இல்லாமல் 163 ஓட்டங்களால் படுதோல்வியடைந்து.

இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி நிர்ணயித்த 320 ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 157 ஓட்டங்களுக்கு சுருண்டமையானது அவ்வணி பெரும் பாதாளத்தில் வீழ்ந்துகிடப்பதைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

முன்னணி வீரர்களான குசல் பெரேரா, உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், அசேல குணரட்ன, திசர பெரேரா ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தது அணியின் எதிர்காலத்தையும் தாண்டி, அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாகியுள்ளது.

அவர்களின் துடுப்பாட்டம் மெச்சும் அளவுக்கு இல்லாத காரணத்தால் அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை பரீட்சீத்து பார்க்கலாம் என்ற முன்னாள் வீரர்களின் கருத்தும் தற்போது இங்கும் அங்கும் உலா வர தொடங்கியுள்ளது.

சந்திக்க ஹதுருசிங்கவின் வித்தைகளையே கற்றுக்கொண்ட வங்கப்புலிகள், சிங்கத்திற்கு காட்டிய மரண பயம் தற்போது கற்றுக்கொடுத்த சந்திக்க ஹதுருசிங்கவையே சற்று சிந்திக்க வைத்திருக்கும்.

சந்திக்க ஹதுருசிங்கவின் புதிய நுட்பங்களும், அணுகுமுறைகளும் பழையதோ என்னவோ அது இன்று பங்களாதேஷ் அணியிடம் எடுபடவில்லை என்பதே உண்மை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg