இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை – நரேந்திர மோடி
In இந்தியா February 23, 2021 4:20 am GMT 0 Comments 1135 by : Krushnamoorthy Dushanthini

இராணுவ தளவாடங்களை அதிகளவில் தயாரித்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நிதியாண்டுக்கான (2021-2022) வரவு செலவு திட்டத்தில் இராணுவ துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை சிறப்பாக பயன்படுத்துவது தொடர்பில் இடம்பெற்ற இணையவழி கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ நம் நாட்டில் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே இராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. சுதந்திரத்துக்கு முன் நாட்டில் நுாற்றுக்கணக்கான இராணுவ தளவாடங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தன.
இரண்டு உலக போர்களின் போதும் நம் நாட்டிலிருந்து தான் அதிகளவில் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் இதை தக்கவைக்க தவறிவிட்டோம். சுதந்திரத்துக்கு பின் இராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் நாம் கவனம் செலுத்தவில்லை.
இதனால் சிறிய ஆயுதத்துக்கு கூட அடுத்த நாட்டை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டது. உலகிலேயே இராணுவ தளவாடங்களைஇ அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடிந்த இந்தியாவால் நவீன ஆயுதங்களை தயாரிக்கவும் முடியும். ஆனால் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வது எளிது என்ற எண்ணத்தால் தளவாடங்கள் தயாரிப்பை அதிகரிக்க முந்தைய அரசுகள் ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலை கடந்த ஆறு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இராணுவ தளவாடங்களின் தயாரிப்புத் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவ தளவாடங்களை தயாரிப்பதில் தனியார் துறையினரும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.