Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்த ரோஹித் ஷர்மா

In கிாிக்கட்
Updated: 10:19 GMT, Mar 18, 2018 | Published: 09:29 GMT, Mar 18, 2018 |
0 Comments
1415
This post was written by : Velauthapillai Kapilan

இந்திய அணியின் வீரர் ரோஹித் ஷர்மா தன்னுடைய இலங்கை ரசிகனான முஹமட் நிலாமின் வீட்டிற்குச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியை காண்பதற்காக இலங்கையில் இருந்து ரோஹித் ஷர்மாவின் ரசிகர் முஹமட் நிலாம் இந்தியா சென்றிருந்தார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலாமின் தந்தைக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு உடனடியாக செல்ல நினைத்த நிலாமிடம் விமான பயணத்திற்கு போதிய பணம் இருக்கவில்லை.

இந்நிலையில் சுதிர் கௌதம் என்பவர் மூலமாக இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு நிலாமின் நிலை தெரிய வந்தது.

இதனை அறிந்துகொண்ட ரோஹித் ஷர்மா விமான டிக்கெட் மற்றும் பணம் ஆகியவற்றை நிலாமிடம் கொடுத்து இலங்கைக்கு தாம் வரும்போது நிலாமின் வீட்டிற்கு வருகை தருவதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு T-20 போட்டியில் விளையாடவந்த இந்திய அணியின் வீரர் ரோஹித் ஷர்மா தனது ரசிகனுக்கு கொடுத்த வாக்கிற்கு அமைவாக  நிலாமின் வீட்டிற்குச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ரோஹித் ஷர்மா:  ”பல ஆண்டுகளாக எனக்கு நிலாமை தெரியும். என்னை அதிகமாக உற்சாகப்படுத்தியவர் அவர். அவர் இந்தியாவுக்கு வந்திருந்தபோது, தனது தந்தையின் உடல்நிலை சரியில்லை என்று கூறி அழுதது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. இவர்கள் போன்றவர்கள் தான் கடினமான சூழ்நிலைகளில் நமக்கு பக்கபலமாக இருப்பார்கள். நான் மார்ச் மாதம் இலங்கைக்கு விளையாட வரும்போது, கண்டிப்பாக நிலாமின் வீட்டிற்கு வந்து அவரின் தந்தையை சந்திப்பேன் என்று கூறினேன். அதன்படி இன்று அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து முஹமட் நிலாம் கூறுகையில் ”ரோஹித் ஒரு தூய உள்ளம் கொண்ட மனிதர். அன்றைய தினம் என் தந்தையின் உடல்நிலை மோசமாக இருந்ததாக எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் உண்மையாகவே என்னிடம் அப்போது பயணத்திற்கான பணம் இல்லை. எனக்கு இந்தியாவில் யாரையும் தெரியாது. அப்போது சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் சுதிர் என்பவர் என்னை ரோஹித் ஷர்மாவை சந்திக்க வைத்தார். அப்போது ரோஹித் என்னிடம் விமான டிக்கெட் மற்றும் பணம் அளித்தார். ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்திறனை விட அவரின் நற்குணம் எளிமையானது” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg