Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாறிச் செல்லும் அரசியல் ஒழுங்கும் இனப்பிரச்சினையும்

In இன்றைய பார்வை
Updated: 11:03 GMT, Mar 13, 2014 | Published: 11:03 GMT, Mar 13, 2014 |
0 Comments
1444
This post was written by : adminsrilanka

இடதுசாரியாக இருந்துகொண்டு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணைக்கு விக்கிரமபாகு கருணாரட்ன ஆதரவு வழங்குவதன் நோக்கம்? கூட்டமைப்பு அவதானிக்க வேண்டிய முக்கியமான நான்கு விடயங்கள்

-அ.நிக்ஸன்-

sumanthiran in jeneva

ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்- சுமந்திரன் மீது குற்றம் சுமத்தியுள்ளார். ஜெனீவாவில் தன்னை பேசவிடவில்லை என்று அனந்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது போன்ற குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பல தடவை முன்வைக்கப்பட்டிருந்தன. தமிழ் ஊடகங்கள் மற்றும் இணையங்களிலும் அவை வெளியாகியிருந்தன. 

இரண்டு விடயங்கள்

இங்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற கூட்டமைப்பின் செயற்பாடுகளில் இருக்கக்கூடிய நம்பகத்தன்மை பற்றியது. இரண்டாவது ஊடகவியலாளர்கள் முன்னிலையில் குற்றங்களை சுமத்துவதால் ஏற்படக்கூடிய பின்னடைவுகள் தொடர்பானது. கூட்டமைப்பின் தலைமையில் இருக்கக்கூடிய பலவீனம் இதன் வெளிப்பாடாகும். கூட்டுப்பொறுப்பு என்பது கூட்டமைப்பிடம் இல்லையென்பதை அனந்தி சசிதரனின் தகவல் கூற்று வெளிப்படுத்தியுள்ளது. அனந்தியை போன்று ஏனைய மாகாணசபை உள்ளுராட்சி உறுப்பினர்களும் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் மறைமுகமாக விசனம் தெரிவிக்கின்றனர்.

60 வருடகால அரசியல் போராட்டத்தை சந்தித்த தமிழ் மக்களின் பட்டறிவு இன்றைய உலக அரசியல் ஒழுங்கிற்கேற்ப வளர்ச்சியடைய வேண்டும். கட்சி அரசியல் நடத்தும் நிலையில் மக்கள் இல்லை. அதற்காகவே ஐந்து கட்சிகளை உள்ளடக்கி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற ஒரு தேசிய இயக்கம் உருவாக்கப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் மக்கள் நினைத்தது நடக்கவில்லை. அனந்தி சசிதரன் கூறிய தகவல்கள் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதற்காக என்ற கேள்வியும் எழுகின்றது. ஒவ்வொரு உறுப்பினர்களும் ஒவ்வொரு விதமாக பேசுவதற்கு, தலைமை அனுமதி வழங்கியதா அல்லது தலைமையால் கட்டுப்படுத்த முடியவில்லையா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் தற்போது எழுகின்றன.

அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரல்

அனைத்து தேர்தல்களிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஆதரவை வழங்கியிருந்தனர். தமது அரசியல் கொள்கையிலிருந்து மக்கள் விலகவில்லை. வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சிதான் தீர்வு என்பதை மக்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் வலியுறுத்தியிருந்தனர். ஆனால் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்தினுடைய சாதாரண நிகழ்ச்சி நிரல்களை ஏற்றுக்கொண்டு செயற்படுவதுபோல் தெரிகின்றது.

2010ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அது ஒருவகையில் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை நியாயப்படுத்தியது. 1948இலிருந்து இனப்பிரச்சினையின் வரலாறு அந்த அறிக்கையில் ஆரம்பிக்கின்றது. (அந்த அறிக்கையிலும் 1987-88ஆம் ஆண்டுகளில் இந்திய இராணுவத்தின் கொடுமைகள் பற்றிய தகவல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன)

ஆனாலும் ஐ.நா நிபுணர்குழு வெளியிட்ட அந்த அறிக்கையை முன்னுதாரணமாக எடுத்து கூட்டமைப்பு இதுவரையும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. மனித உரிமைச் சபையின் 19 நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து விளக்கமளித்துள்ளோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியது எந்தளவுக்கு உண்மையானது? அனந்தி சசிதரன் கூறியதை நோக்கினால் சுமந்திரன் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்கள் பொய்யானவை என்ற கருத்து வெளிப்படுகிறது. சுமந்திரன் இதுவரை ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது.

விக்கிரமபாகு கருணாரட்ன

தமது செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு கிழக்கு மக்களிடம் கூட்டமைப்பு யோசனை கேட்கவில்லை. தேர்தல் பிரசாரங்களுக்குச் செல்லும்போது அவர்கள் சொன்னதைத்தான் மக்கள் கேட்டார்கள். ஆனால் மக்களின் விருப்பங்கள், உணர்வுகளை கூட்டமைப்பு அறியவிரும்பவில்லை. மகளிர் அமைப்புகளை சந்திக்கவில்லை. மாவட்ட ரீதியில் மாணவர்- இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புகளை புதிதாக உருவாக்கவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய நிதியை கையாள்வதற்கான ஒரு கட்டமைப்பைக்கூட உருவாக்கவில்லை. வெறுமனே ஊடக அறிக்கைககளை மாத்திரம் வெளியிட்டு அரசியல் நடத்துகின்றனர்.

வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி ஒன்றை பெறுவதற்காக அரசியல் ரீதியில் சாதகமான சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடுவது. வெளிநாடுகளில் இருக்கக்கூடிய அரசியல் நிபுணர்கள்- சர்வதேச கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை கேட்பது- இந்திய கொள்ளை வகுப்பாளர்களுடன் மக்களின் அரசியல் உணர்வுகளை பகிர்வது- குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு பின்னரான காலகட்டத்தில் உடனடியாக தேவைப்படும் அரசியல் இருப்புத் தொடர்பான விடயங்களை சரியாக எடுத்துரைத்தல் போன்ற செயற்பாடுகளில் கூட்டமைப்பு ஈடுபடவில்லை. காணாமல் போனோர் தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான இடதுசாரி முன்னணி கொழும்பில் துணிச்சலுடன் மேற்கொண்ட நடவடிக்கைகள்- சர்வதேச ரீதியில் அரசியல் தாக்கத்தை செலுத்தியிருந்தன. ஆனால் துணிச்சல் மிக்க செயற்பாடுகளில் இறங்கக்கூடிய தகுதி இருந்தும் கூட்டமைப்பு மென்போக்கான நடவடிக்கைகளையே முன்னெடுக்கின்றது.

சர்வதேச அரசியல் ஒழுங்கு

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் ஏகாதிபத்திய கொள்கையை விக்கிரமபாகு கருணாரட்ன ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து அதனை ஊக்குவிக்கின்ற நடவடிக்கைகளில் விக்கிரமபாகு கருணாரட்னா ஈடுபடுகின்றார். ஆகவே இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் இருந்து தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் பங்கிடப்பட வேண்டும். வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று விக்கிரமபாகு கருணாரட்னவும் அவரின் கட்சியும் கூறுகின்ற அந்த துணிச்சல்- தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு இல்லை என்பதையே அனந்தி சசிதரனின் கூற்றும் கோடிட்டு காண்பிக்கின்றது.

சர்வதேச அரசியல் ஒழுங்கில் இந்தியா- அமெரிக்கா மற்றும் சீனா எந்த நிலையில் இருக்கின்றது. பிரித்தானியா, அவுஸ்திரேலியா- கனடா போன்ற நாடுகள் பிராந்திய ரீதியிலான அரசியல் முறைகளில் எதனை முன்னிலைப்படுத்துகின்றன என்ற விடயங்களை கூட்டமைப்பு அறிந்து வைத்துள்ளதா? உலக அரசியல் ஒழுங்கில் இந்திய வெளியுறவு கொள்கையில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன? அந்த மாற்றம் இலங்கை வெளியுறவு கொள்கையுடன் எவ்வாறு இணங்கிச் செல்லப் போகின்றது? சீனாவுடனான உறவில் ஏற்படுத்தப்போகும் மாற்றம் என்ன? இந்த விடயங்களில் கணிசமான தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் கட்டுரைகளாக செய்திகளாக வெளிவருகின்றன. அவற்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அவதானிக்கின்றதா?

மாறிச் செல்கின்ற அரசியல்

முதலாவது உலக ஒழுங்கில் மாறிச் செல்லக்கூடிய அரசியல் அணுகுமுறைகளை அவதானித்தல். இரண்டாவது இலங்கையில் பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டும் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தலில் அவர்கள் முன்னெடுக்கவுள்ள கொள்கைகளும். மூன்றாவது இந்திய தேர்தலில் வெற்றி பெறவுள்ள கட்சியின் புதிய கொள்கைளும் அதனுடனான இந்திய வெளியுறவு கொள்கைகளின்- மற்றும் தமிழக செயற்பாடுகள். நான்காவது ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள். இந்த நான்கு விடயங்களையும் அவதானிக்கக்கூடிய தேர்ச்சி பெற்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பில் இருக்கின்றனர். முன்னுக்குப் பின் முரணாக பேசுவதை விடுத்து இந்த அணுகுமுறைகளை சற்று அவதானிப்பது நல்லது. இந்த நான்கு விடயங்கள் பற்றிய மக்களின் அபிப்பிராயங்களை பெறுவதும் அவசியம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg