இந்தோனேசிய தேர்தலில் பிரதான உறுப்பினர்கள் வாக்களிப்பு
இந்தோனேசியாவில் ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூர் தேர்தல் ஆகியன ஒரே தினத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், பிரதான உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜொகோ விடோடோ வாக்களித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜொகோ விடோடோ, அடுத்த ஐந்து வருட காலத்திற்கு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றர்.
அவருக்கு போட்டியாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் பிரபுவோ சுபியாண்டோ போட்டியிடுகின்றார். 67 வயதான பிரபுவோவிற்கு இஸ்லாமிய மதம் சார்ந்த குழுக்களின் ஆதரவு பலமாக காணப்படுகிறது. அவரும் தமது வாக்கினை பதிவுசெய்துள்ளார்.
அரசியல் குடும்பத்திலிருந்து வருகைதந்த பிரபுவோ, இராணுவத்தின் முன்னாள் விசேட பிரிவுகளின் தளபதியாக செயற்பட்டார். அவருடைய தந்தை, முன்னாள் ஜனாதிபதிகளான சுகார்னோ மற்றும் சுஹார்டோ ஆகியோரின் அமைச்சரவைகளில் இரண்டு தடவைகள் அமைச்சராக பதவிவகித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
ஜொகோ விடோடோவின் நேரடி போட்டியாளராக பிரபுவோ காணப்பட்டாலும், விடோடோவிற்கான ஆதரவு அதிகமாக காணப்படுவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்தோனேசிய பிரதி ஜனாதிபதி வேட்பாளர் மாருஃப் அமீனும் தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார். மேயராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அமீன் இந்த தேர்தலில் பிரதி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றார்.
அத்தோடு, பிரதி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் சன்டியாகோ உனோவும் தமது வாக்கினை பதிவுசெய்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் பிரபுவோவிற்கு இஸ்லாமிய குழுக்களுடன தொடர்பிருப்பதாக கூறப்படும் நிலயில், அவர்களின் ஆதரவு சன்டியாகோவிற்கும் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தோனேசிய தேர்தலில் 245,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று மாலையே முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல், உலகிலேயே ஒரே நாளில் நடத்தப்படும் மிகப்பெரிய தேர்தல் என வர்ணிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.