தனிமைப்படுத்த கப்பலில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜப்பானின் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ‘டயமண்ட் பிரின்சஸ்’ கப்பலில் பயணித்த மேலும் 40 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சர் கசுனோபு கடோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக ‘டயமண்ட் பிரின்சஸ்’ கப்பலில் இதுவரை 175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கலாக மொத்தம் மூவாயிரத்து 711 பேருடன் வருகை தந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலை கடந்த 04ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தி வைக்குமாறு ஜப்பான் நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குறித்த கப்பலில் இருந்து கடந்த மாதம் ஹொங் கொங்கில் இறங்கிய பயணிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கப்பல் தனிமைப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
அதிலுள்ள பயணிகளுக்கு தினந்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில் இதுவரை 300 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 175 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி வரை குறித்த கப்பல் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கப்பலில் உள்ள பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.