அபிவிருத்தி செயற்பாடுகள் மக்களின் நீண்டகால பயன்பாட்டிற்கு உதவுவதாக அமைவது அவசியம். அதனை விடுத்து, குறுகிய கால திட்டங்கள் எவ்வித பலனையும் கொடுக்காது.
அந்தவகையில், வடக்கின் அபிவிருத்தி பூச்சியத்திலிருந்து அரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் உரிய தரத்துடன் அமைக்கப்படாமை தொடர்பில் இன்றைய ஆதவனின் அவதானம் ஆராய்கின்றது.
கிளிநொச்சி கோணாவில் வீதியிலிருந்து ராஜன் குடியிருப்பிற்கு செல்லும் வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலமே இது.
குறித்த பாலம் அமைக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னர் இவ்வாறு சேதமடைந்துள்ளமை தொடர்பில் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கரைச்சி பிரதேச சபையின் கண்காணிப்பில் இந்த பாலம் அமைக்கும் பணி இடம்பெற்றுள்ளது. எனினும், பாலம் அமைக்கும்போது ஏற்பட்டுள்ள தரக்குறைவுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தாமை தொடர்பாக மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
மக்களின் இக்குற்றச்சாட்டு தொடர்பாக கரைச்சி பிரதேச சபைத் தலைவர் அ.வேலமாலிகிதனை ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.
பாலத்தின் ஒரு நீர்போக்கி குழாய் மாத்திரமே உடைந்துள்ளதாக குறிப்பிட்ட கரைச்சி பிரதேச சபை தலைவர், அதனை புனமைக்க அத்திவாரம் இடப்பட்டுள்ளதாக கூறினார்.
கடும் மழை காரணமாகவே இந்த சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கரைச்சி பிரதேச சபைத் தலைவர், 9 இலட்சம் ரூபாய் செலவில் தற்போது அதன் நிர்மாணப் பணிகள் இடம்பெறவுள்ளதாக எம்மிடம் தெரிவித்தார்.
கோணாவில் யூனியன்குளம் குடியிருப்பு சனசமூக நிலையத்திடம் இதற்கான ஒப்பந்தம் கடந்த 11 நாட்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்டதாக கரைச்சி பிரதேச சபைத் தலைவர் குறிப்பிட்டார். மூன்று மாதங்களுக்குள் இந்த பாலத்தை கட்டவேண்டுமென ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குறித்த மூன்று மாதங்களுக்குள் பாலம் கட்டப்படுகின்றதாக என்பதை ஆதவனின் அவதானம் தொடர்ந்தும் அவதானிக்கும்.