தற்போதும் மைத்திரி, அரசாங்கத்தின் பங்காளரே: தேர்தலின் பின்னரே பாரிய மாற்றம் – மனுஷ

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஆட்சியில் பாரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் அரசாங்கத்தின் பங்காளராகவே உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வரையில் இந்த தேசிய அரசாங்கமே நிலவும். தேர்தல் காலம் வரையில் தேசிய அரசாங்கம் குறித்து எவ்வித பிரச்சினையும் அரசாங்க மட்டத்தில் ஏற்படப் போவதில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலங்களில் தேசிய அரசாங்கத்துக்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முயற்சித்திருப்பினும் அதனை சமர்ப்பிக்கவில்லை.
எஞ்சியிருக்கும் குறுகிய காலத்திலும் அதற்கான அவசியம் ஏற்பாடாது என எதிர்பார்க்கின்றோம். எவ்வாறாயினும் தேர்தலின் பின்னர் ஆட்சியில் பாரிய மாற்றத்தை எதிர்பார்க்க கூடியதாக இருக்கும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போதைய அமைச்சரவையின் தலைவராக அங்கம் வகிக்கும் அதே சந்தரப்பத்தில் நாட்டின் முக்கிய அமைச்சுக்களான பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சுழல் அமைச்சுக்களுக்கு பொறுப்பானவராகவும் இருக்கிறார்.
இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் பங்காளராக காணப்படும் நிலையில் தற்போதும் தேசிய அரசாங்கமே நிலவுகின்றது. இதற்கு மாற்று கருத்துக்கள் எதுவும் இருக்கமுடியாது.
தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் தற்போதும் ஒரு தேசிய அரசாங்கமே நிலவுகின்றது.
ஆளும் தரப்பில் இரு பிரதான கட்சிகளும் அங்கம் வகிக்குமாயின் அதனை தேசிய அரசாங்கமாகவே கருதவேண்டும். அதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் அரசாங்கத்தின் பங்காளராகவே உள்ளார். எனவே தற்போது தேசிய அரசாங்கமே காணப்படுகின்றது. இதனை எவராலும் மறுக்க முடியாது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.