தாதியின் மரணத்திற்கு நீதி கோரி ஹற்றனில் கவனயீர்ப்பு போராட்டம்
தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படும் தாதியின் மரணத்திற்கு நீதி விசாரணை கோரி ஹற்றனில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தை ஹற்றன் நீதிமன்ற நீதவானின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் ஹற்றன் நகரசபைக்கு முன்பாக நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போராட்டம் இடம்பெற்றது.
ஹற்றன் தனியார் வைத்தியசாலையொன்றில் பணியாற்றிவந்த பெண் தாதி கடந்த மாதம் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவர் உயிரிழப்பதற்கு முன்னர் தனது மரணத்திற்கு வைத்தியசாலையின் உரிமையாளரான வைத்தியரும் அவரது மனைவியுமே காரணம் என அவர் பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
ஆனால், குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. அத்துடன், பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணை முறையாக முன்னெடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தாதியின் மரணம் தொடர்பான வழக்கு இன்று ஹற்றன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த விசாரணை நீதியாக இடம்பெற்று குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.