பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாவையும் கட்டுப்படுத்தும் – ஜேர்மனி சுகாதாரத்துறை அமைச்சர்
In ஐரோப்பா December 22, 2020 3:53 am GMT 0 Comments 1515 by : Dhackshala

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் புதிய வகை கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்தும் என ஜேர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரஸைவிட மிகவும் வேகமாக பரவுகின்றமை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை செய்துள்ளன.
இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மார்டனா தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி ரஷ்யாவில் பயன்பாட்டில் உள்ளது.
தற்போது பிரித்தானியாவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவுவதால் தற்போதைய தடுப்பூசிகள் பயனளிக்காமல் செல்லலாம் என பரவலான கருத்துக்கள் நிலவி வந்தன.
இந்த நிலையில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளே தற்போதைய புதிய கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் நம்புவதாக ஜேர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தற்போதுவரை தமக்கு கிடைத்த தகவலின்படி, புதியவகை கொரோனா வைரஸ் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியில் (பைசர் தடுப்பூசி) எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய வகை கொரோனா வைரஸையும் தற்போதுள்ள தடுப்பூசிகள் கட்டுப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.