முஸ்லிம் பெண் உறுப்பினருக்கு எதிராக, ட்ரம்ப் வன்முறையை தூண்டவில்லை – வெள்ளை மாளிகை மறுப்பு

முஸ்லிம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இல்கான் ஒமருக்கு எதிராக, ஜனாதிபதி ட்ரம்ப் வன்முறையை தூண்டவில்லை என வெள்ளை மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ளது.
மின்னசோட்டாவை சேர்ந்த, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இல்கான் உமர் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுவதையும், இரட்டைக் கோபுர தாக்குதல் காட்சிகளையும் மிக்ஸ் செய்து, அதிபர் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
ஏதோ சிலர் செய்த வேலை என இரட்டை கோபுர தாக்குதலைப் பற்றி இல்கான் உமர் கூறுவது போன்ற அர்த்தத்திலும், ஆனால் தாங்கள் அதை ஒருபோதும் மறக்க மாட்டோம் என ஜனாதிபதி கூறுவது போலவும் அந்த மிக்சிங் வீடியோ அமைந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் நான்சி பெலோசி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, வீடியோவை ட்ரம்ப் உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இல்கான் உமர் கூறியதற்கு திரித்து அர்த்தம் கற்பிப்பதுடன், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல் என கமலா ஹாரிஸ் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இல்கான் உமர் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறும் சபாநாயகர் நான்சி பெலோசி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், இல்கான் ஒமருக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் வன்முறையை தூண்டவில்லை என அவரது செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.