Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு கிழக்கில் கலவரமான சூழலை பேண விளைகிறதா அரசாங்கம்?

In இலங்கை
Updated: 10:11 GMT, Nov 29, 2016 | Published: 10:11 GMT, Nov 29, 2016 |
0 Comments
1382
This post was written by : Varshini

வடக்கு கிழக்கில் ஒரு கலவரமான சூழ்நிலையை பேணி, மக்களை சஞ்சலப்படுத்தி, அவர்களை தொடர்ந்தும் கையேந்துபவர்களாக வைத்திருக்க வேண்டுமெனவும், குறித்த பகுதிகளுக்கு அபிவிருத்தி நிதிகள் சரியான முறையில் வந்தடையக்கூடாது என்ற ஒரு உள்ளார்ந்த திட்டமும் நாட்டை ஆட்சிசெய்பவர்களிடம் உள்ளதென மட்டக்களப்பு மாவட்ட சமூக ஆர்வலரும் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் ஒன்றியத்தின் கிழக்கிற்கான பிரதிநிதியுமான வி.கமலதாஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அண்மைக்காலமாக பௌத்த தேரர் ஒருவர் செயற்பட்டு வரும் விதம் மற்றும் அதனால் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பாக எமது ஆதவன் செய்திச்சேவைக்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”சட்டத்தை மீறி ஒரு தனிமனிதன் இவ்வாறு அட்டகாசம் காட்டுவது ஒரு பிழையான நடைமுறை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவன நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கவேண்டும் என நான் கேட்டிருந்தேன். ஆனால் அந்த நேரங்களில் எவரும் இதைப்பற்றி கவனிக்கவில்லை. இன்று அது பூதாகரமாக வளர்ந்துள்ளதோடு, குறித்த தேரர் இனவாத மதவாத கலவரத்தை தூண்ட முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்.

இருந்தபோதும் பொலிஸார் தன் கடமையை செய்யவில்லை. இந்த மாவட்டத்தில் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு இயங்கி கொண்டிருக்கின்றது. ஆனால் பொலிஸார் அரசியல்வாதிகளினதும் பணக்காரர்களதும் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாகவும் அவர்களுடைய ஏவல்காரர்களாகவும் செயற்படுவதோடு, நாட்டின் சட்டத்தை தங்களுக்கு விரும்பிய வகையில் மக்களுக்கு எதிராக பயன்படுத்தி வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

நாடு ஒற்றுமைப்பட்டு அரசியல் பிரச்சினை தீர்க்கப்படும் என நாங்கள் ஆழமாக நம்பியிருந்தோம். ஆனால் நல்லாட்சி என்ற பெயரில் மேலாதிக்க கொள்கையைக் கொண்ட இரண்டு சக்திகளும் கூட்டாக சேர்ந்துகொண்டு, இன்று வெளிநாடுகளின் கெடுபிடி நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு வெளிமுகத்தை காட்டிக்கொண்டு உள்ளே சிங்கள பெரும்பான்மை மேலாதிக்க கொள்கையை முன்னெடுத்துச் செல்கின்றது.

இந்த இரு அரசியல் கட்சிகளுமே சிறுபான்மை மக்களுக்கு சரியான தீர்வை தராது. அதேபோல பெரும்பான்மை மக்களையும் நிம்மதியாக இருக்கவிடாமல் மீண்டும் ஒரு வன்முறையான சூழலுக்கு மக்களைக் கொண்டு சென்றுவிடுமோ என எண்ணவேண்டியுள்ளது.

நல்லாட்சி என கூறிக் கொண்டு வந்த இந்த அரசாங்கம் இரண்டு வருடங்களுக்கு மேலாக உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளது. பொலிஸார் சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கின்றனர்.

ஆகவே நல்லாட்சியின் அர்த்தம் என்னவென கேட்கவேண்டிய நிலைக்கு இன்று சிவில் சமூகத் தலைவர்களாகிய நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம். அரசியல்வாதிகள் வெளிநாடுகளை திருப்திப்படுத்துவதற்காக இந்த நல்லாட்சி வேஷத்தை வைத்தார்களே தவிர, இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அன்றாட அணுகுமுறைகளை இரண்டு கட்சிகளுமே எட்டவில்லை” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg