Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பொது விடுமுறையிலிருந்து பொங்கல் பண்டிகை நீக்கம்: மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

In
Updated: 04:47 GMT, Jan 10, 2017 | Published: 04:46 GMT, Jan 10, 2017 |
0 Comments
1178
This post was written by : Shailu
pongal

பொங்கல் பண்டிகையை பொது விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசை கண்டித்து சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகையை மத்திய அரசு நீக்கி உள்ளதற்கு மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த உள்ளனர்.

இது குறித்து மத்திய அரசு ஊழியர்கள் தமிழ்நாடு மகா சம்மேளனம் பொதுச்செயலாளர் எம்.துரைபாண்டியன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

‘மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் அரசு விடுமுறைகள் உள்ளன. இதில் தசரா விழா, ரமலான் பண்டிகை, தமிழ்நாடு, வடமாநிலங்களில் அடுத்தடுத்து கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை ஆகிய 3 நாட்கள் மாநிலத்துக்கு ஏற்றார் போல் விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் இருந்து 100 ஆண்டுகள் பொங்கல் பண்டிகைக்கு கட்டாய அரசு விடுமுறை நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டுடன் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து விலக்கி, வரையறுக்கப்பட்ட விடுமுறை என்று மத்திய அரசு அறிவிக்க போகிறது என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது

இதையடுத்து கடந்த மாதம் 28ஆம் திகதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினோம். ஆனால் அந்த உத்தரவை மத்திய அரசு இதுவரையில் திரும்ப பெறவில்லை.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இல்லை என்பதால், பொங்கல் பண்டிகையும் இல்லை என்று மத்திய அரசு நினைத்துவிட்டதோ என்று எண்ண தோன்றுகின்றது.

எனவே வழக்கம் போல் பொங்கல் பண்டிகைக்கு கட்டாய அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று (செவ்வாய்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இதனை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) தபால் நிலையங்கள் முன்பு முற்றுகை போராட்டமும், எதிர்வரும் 13ஆம் திகதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் முழக்க போராட்டமும் நடத்தப்படும். மேலும் பொங்கல் பண்டிகை அன்றும் பணி மறுப்பு போராட்டம் நடத்துவோம்.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.