Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பருத்தித்துறையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டால் விபத்து: நால்வர் படுகாயம்

In
Updated: 16:11 GMT, Jan 10, 2017 | Published: 13:06 GMT, Jan 10, 2017 |
0 Comments
1464
poin-pedro-accident-01

கனரக வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமையால், கனரக வாகனம், கயஸ் ரக வான் ஒன்றில் மோதியதில், நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை யாழ். பருத்தித்துறை – மந்திகை, சாரையடி பகுதில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கனரக வாகனத்தில் சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் சென்றுள்ளனர்.  இதனையடுத்து, மந்திகை கிராமக் கோடு பகுதியில் வைத்து பொலிஸார் வாகனத்தினை மறித்துள்ளனர்.

இதன் போது, வாகனத்தை நிறுத்தாது தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில், பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு கனரக வாகனத்தின் ரயரில் பட்டதையடுத்து குறித்த கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கயஸ் ரக வாகனத்தில் மோதியுள்ளது.

குறித்த கயஸ் ரக வாகனத்தில் பயணித்த இருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான கனரக வாகனத்தில் சட்ட விரோதமாக மண் கடத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தின் போது பொலிஸாருக்கும் சம்பவ இடத்தில் நின்றவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் பின்னர் அந்த பகுதியில் பதற்ற நிலைமை காணப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

poin-pedro-accident-01 poin-pedro-accident-02 poin-pedro-accident-03