Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவசாயிகளின் போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு

In இந்தியா
Published: 04:01 GMT, Mar 29, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Elakkiya

தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு வழங்கும் என கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தல், வறட்சி நிவாரணம் வழங்குவதில் வித்தியாசம் காட்டாமல் ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்குதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், அண்டை மாநிலங்களிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் உரிமைகளை நிலைநாட்டுதல், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட மத்திய அரசுக்கு கண்டனம், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி மாநிலம் தழுவிய ரீதியில் பொதுவேலை நிறுத்த போராட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத்தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் தமிழக எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் என்னிடமும் கேட்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தி.மு.க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

ஆனாலும் மத்திய- மாநில அரசுகள் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை ஒருபொருட்டாக நினைத்து பரிசீலிக்க மறுப்பதால், இன்றைக்கு டெல்லியில் தமிழக விவசாயிகள் பட்டினியும் பசியுமாக கிடந்து தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டிய அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அல்லல்படும் விவசாயிகளின் துயரை நீங்குவதற்காக தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் நடத்தப்படும் வேலை நிறுத்தத்திற்கு தி.மு.க. தனது பரிபூரண ஆதரவை வழங்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg