Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெற்கு மக்களின் துயரத்தில் வடக்கு மக்கள் மனிதாபிமானத்துடன் பங்கெடுக்கவில்லை

In இன்றைய பார்வை
Updated: 11:07 GMT, Jun 1, 2017 | Published: 11:07 GMT, Jun 1, 2017 |
0 Comments
9043
This post was written by : Vithushagan

தென் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 44 பாடசாலை மாணவர்கள் உட்பட 202 பேர் பலியாகி இருப்பதாகவும், மேலும் 93பேரைக்காணவில்லை என்றும், 6 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தமது வாழ்விடங்களிலிரந்து இடம் பெயர்ந்து தற்காலிக இடங்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை, காலி, நுவரெலியா, ஹம்பஹா, அம்பாந்தோட்டை, கேகாலை, கொழும்பு உட்பட 14 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரையான தகவல்களின் அடிப்படையில் 1000 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல ஊர்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலைகளை எப்போது ஆரம்பிப்பது என்பதை அரசாங்கத்தால் தீர்மானிக்க முடியவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களிடையே வயோதிபர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள், நோயாளிகள் எனப் பலதரப்பட்டவர்களும் உள்ளடங்கியுள்ளனர். கர்ப்பிணிகள், அவர்களுக்கான மருத்துவத் தேவைகள், நெப்கின் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்கள், ஊட்டச்சத்து மருந்துகள் என்பவை பெரும் தட்டுப்பாடானதாக இருக்கின்றது.

பத்து நாட்களாக தொடர்ந்த மழை, மண்சரிவு, இடப்பெயர்வுகள் என்ற எச்சரிக்கையான காலநிலை தற்போது சிறியளவில் மாற்றமடைந்துள்ளதால், வெள்ளநீர் வழிந்து வருவதாகத் தெரிகின்றது. எனினும் தொடர்ந்தும் கடுமையான மழை பெய்வதற்கும், மண் சரிவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

வெள்ள நீர் காரணமாக பாதிப்படைந்திருந்த குடிநீர் நிலைகள், மலசலகூடங்கள் மற்றும் போக்குவரத்து வீதிகள் என்பன பாரியளவில் சேதமடைந்துள்ளதால் அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு முழுமையான புனரமைப்பு பணிகள் முன்னெடுக்க வேண்டியிருக்கும்.

சுகாதாரம், மின்சாரம், வீதிப்போக்குவரத்து, பாடசாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை இயல்பு நிலைக்கு கொண்டுவந்த பிறகே இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற முடியும். அதேவேளை இந்த இயற்கை அனர்த்தத்தில் உறவுகளைப் பலிகொடுத்த மக்களுக்கு ஆறுதல் கூறுவதுடன், உயிரிழப்புக்களுக்கு உரிய நஷ்ட ஈடுகளையும் வழங்க வேண்டும். இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகள் உரியவாறு விநியோகிக்கப்படுவதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறியிருக்கின்றார்கள்.

நிவாரணப் பணிகளில் அரசாங்கம், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் என பல தரப்பினர் ஈடுபட்டுள்ளபோதும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் சென்றடையக் கூடியவகையில் நிவாரண விநியோக முறைமை திட்டமிடப்படாததால் ஒரு பகுதி மக்களுக்கே மீண்டும் மீண்டும் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும், போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டு தூரப் பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்களுக்கு போதுமான நிவாரணப் பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் அந்த மக்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் கப்பல்களில் பெருமளவான நிவாரணப்பொருட்களை இலங்கைக்கு வழங்கியிருக்கின்றன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுவருவது அரசாங்கத்திற்கு சவாலக இருந்தபோதும் அதை அரசாங்கம் விரைவாகச் செய்ய வேண்டும். அவர்களின் விபரங்களை முறையாகத் திரட்டுவதும் அவசியமாகும். அப்போதுதான் மக்களுக்கு முறையான உதவிகளையும், நிவாரணங்களையும் எல்லொருக்கும் கிடைக்கக்கூடியவகையில் வழங்க முடியும்.

தென் இலங்கை அனர்த்தத்தில் அகப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை பலரும் வழங்கி வருகின்றபோதும் இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கவில்லை. உதவிப் பணிகளை யார் முன்னெடுப்பது என்ற கேள்விகள் எழுந்தபோது, வடக்கு மாகாணசபை அவற்றை முன்னெடுத்திருக்கலாம். அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் அதைச் செய்திருக்கலாம். துரதிஷ்டவசமாக இத்தரப்புகள் எவரும் தென் இலங்கை மக்களுக்கு உதவ மனிதாபிமான பணியை முன்னெடுக்க முன்வரவில்லை.

கப்பல்கள் வைத்து மொத்த வியாபாரம் நடத்தும் வியாபாரிகள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்து உறவுகள் உலகம் பூராகவும் பரந்து வாழ்ந்து வருகின்றார்கள். தவிரவும் தம்மால் முடிந்த உதவியைச் செய்வதற்கு விருப்பமுடையவர்கள் வடக்கில் இருக்கின்றார்கள். ஆனால் தென் இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அவர்கள் எவரும் முன்வரவில்லை என்பது தென் இலங்கை மக்களுடனான உறவு எவ்விதமாக வடக்கில் வேரூன்றி இருக்கின்றது என்பதையே வெளிக்கட்டுவதாக இருக்கின்றது.

வடக்கிலிருந்து உதவிகள் கிடைக்காவிட்டால் தெற்கில் மக்களின் நிலைமை எல்லாம் தலைகீழாகப் போய்விடும் என்பதல்ல நிலைமை. தென் இலங்கையில் மக்கள் எதிர்பாராத அவலத்திற்கு முகம்கொடுத்து நிற்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் மனிதாபிமான சமிக்ஞையைக் காட்டுவது தமிழ்மக்களின் நல்லிணக்க மற்றும் மனித நேயத்தை உணர்த்துவதாக இருந்திருக்கும்.

தெற்கிற்கு மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு வடக்கில் ஒரு முயற்சி எடுக்கப்பட்டிருந்தால் குறைந்தது 10 பார ஊர்திகளிலாவது நிவாரணப்பொருட்களை சேகரித்துக்கொண்டுவந்து தெற்கில் வழங்கியிருக்கலாம். அயல் நாடுகள் ஓடிவந்த போதும், அருகில் இருக்கும் தமிழ் நண்பர்கள் காதையும். கண்களையும் மூடிக்கொண்டு இருந்துவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி மேல் எழச்செய்கின்றது.

யுத்தம் நடந்த காலத்தில் வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே ஒரு இடைவெளியும், பகைமை உணர்வும் ஏற்பட்டிருக்கலாம். யுத்தத்திற்குப் பின்னர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் காயங்களை ஆற்றவும், அவர்களுக்கு அரசியல் நீதியை வழங்கவும் தென் இலங்கை அரச தலைமைகள் பின் நிற்கின்றனவே தவிர, தமிழ்மக்களின் நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் தென் இலங்கையில் இருக்கவே செய்கின்றார்கள்.

ஆத்தகைய கருத்துக்கொண்ட சிங்கள மக்களை ஒன்று சேர்க்கும் தலைமை தென் இலங்கையில் இல்லாததுபோலவே, வடக்கிலும், நியாயத்தின் கீழும், மனிதாபிமானத்தில் கீழும் அணி திரளக்கூடிய மக்களை ஒன்றிணைக்கும் தலைமை தமிழ்மக்கள் மத்தியில் இல்லை. வாக்குகளை கணக்கிட்டுக்கொண்டு அரசியல் சுகபோகங்களை கற்பனை செய்து கொண்டிருக்கும் அரசியல் தலைமைகளால் துணிச்சலாக இவ்வாறான பணிகளை முன்னெடுக்கமுடியாது. இந்த இடைவெளிதான், வடக்கிற்கும், தெற்கிற்கும் இடைவெளிகளை அதிகப்படுத்தி வந்துள்ளதை இருதரப்பு மக்களும் புரிந்துகொண்டு எதிர்காலத்தை நோக்கிச் சிந்திக்க வேண்டும்.

மக்கள் என்னதான் உணர்ச்சிக்கு எடுபட்டு செலாற்றக்கூடியவர்களாக இருந்தாலும், மக்கள் ஒருபோதும் தன் எழுச்சியாக அணிதிரண்டு காரியங்களை ஆற்றமாட்டார்கள். அப்படித்தான் மக்கள் தன் எழச்சியாக கிளர்ந்து எழுந்தாலும், அந்த தன் எழுச்சியை சரியாக தூண்டிவிட்டு இலக்கு நோக்கி முன்னேறுவதற்கும், வெற்றியை பெற்றுக்கொள்வதற்கும் நிதானமான தலைமை இருக்கவேண்டும்.

இரத்த ஆறு நிலத்தை சகதியாக்கிப் பாய்ந்த மனிதக் கொலைகளையும்; மரணத் தருவாயில் மக்கள் எழுப்பிய வானத்தை எட்டிய அவலக் குரல்களையும் தமிழ்மக்கள் சந்தித்த முள்ளிவாய்க்காலை விடவும் தென் இலங்கை அனர்த்தம் பெரிதாக இல்லை என்று சிலர் நினைக்கலாம்.

முள்ளிவாய்க்கால் அவலத்தோடு, ஒப்பிட்டு விடயங்களைப் பார்த்து ஆறுதலடைபவர்களாக நாம் இருந்துவிட முடியாது. எப்படி நடந்தாலும் சக மனிதனின் மரணத்தைக் கண்டு மனம் வருந்தவேண்டும். அந்த மரணம் ஏற்படுத்திய இழப்பையும். துயரத்தையும் பகிர்ந்துகொள்ள முற்பட வேண்டும்.

தமிழர்களாகிய நாம் மரணத்தின் வலியையும். இழப்பின் துயரத்தையும் இரத்தமும் சதையுமாக அனுபவித்தவர்கள். என்பதால் தென் இலங்கையில் இயற்கை ஏற்படுத்திய அழிவில், மக்கள் எத்தனை துயரத்தை சந்தித்திருப்பார்கள் என்பதையும், அந்த நேரத்தில் வாழ்ந்த வீட்டைவிட்டு உடுத்த உடையோடு இடம்பெயர்வதென்பது எத்தகைய பரிதாபமானது என்பதையும், மாற்று உடை இல்லாமலும், ஒரு வேளை உணவுக்காகவும் கை ஏந்தி காத்திருப்பது என்பது எத்தகை நரகவேதனையானது என்பதையும் புரிந்துகொண்டவர்களாக நாம் எமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.

-ஈழத்துக்கதிரவன்-

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg