கேப்பாபுலவில் மக்களை வெளியேற இராணுவம் அனுமதி: மீண்டும் மூடப்பட்டது வீதி(2ஆம் இணைப்பு)
கேப்பாப்பிலவில் மக்கள் வெளியேற முடியாத வகையில் பிரதான நுழைவாயில் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த மாவட்ட செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைய, நுழைவாயிலை திறந்து மக்கள் வெளியேற இராணுவம் அனுமதித்து்ளளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்துள்ளாா்.
இதனால் குறித்த பிரதேசத்தில் நிலவிவந்த பதற்றமான சூழல் தணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை மக்கள் வெளியேறியதையடுத்து, இன்று காலை திறக்கப்பட்ட வீதியின் பிரதான வாயில் கதவை இராணுவத்தினர் மீண்டும் மூடியுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கேப்பாப்பிலவு முகாமிற்குள் மக்களை அடைத்து வைத்த இராணுவம்! – பிரதேசத்தில் பதற்றம்
கேப்பாப்பிலவில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் வழிபாட்டிற்குச் சென்ற மக்கள் வெளியேற முடியாத வகையில் இராணுவத்தினா் பிரதான வாயிலை மூடியுள்ளதால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்துள்ளாா்.
கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்திலுள்ள தமது கோயிலுக்கு வழிபாட்டிற்காக மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றதோடு, அவர்களுடன் இணைந்து தென்பகுதி பிக்கு ஒருவரும் தென்பகுதி மக்களும் சென்றிருந்த நிலையில் பிரதான வீதியை மீண்டும் மூடியுள்ளதால் அங்கு குழப்பமான நிலை தோன்றியுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் வழிபாட்டிற்கு சென்ற மக்கள் பீதியில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு மாவட்ட செயலாளர் சென்று இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.