Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிரணியின் பகல் கனவே ஆட்சிக்கவிழ்ப்பு: அசோக் அபேசிங்க

In இலங்கை
Published: 06:53 GMT, Jul 26, 2017 |
0 Comments
1553
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதென்பது, எதிரணியினர் காணும் பகல் கனவாகுமென போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை விஜயம் செய்த பிரதியமைச்சர், ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றியபோது-

“ஆட்சி கவிழ்ப்பு பற்றி பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை எவராலும் அசைக்க முடியாது. அரசாங்கம் மிகவும் பலம்பொருந்திய நிலையிலேயே காணப்படுகின்றது.

ஒரு காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பலம் பொருந்திய கட்சியாக காணப்பட்டது. கல்குடாவில் கே.டபிள்யு.தேவநாயகம், மட்டக்களப்பில் பரீத் மீராலெப்பை மற்றும் சின்னலெப்பை, பட்டிருப்பில் தங்கராசா மற்றும் ராசமாணிக்கம் போன்ற பலம் பொருந்திய தலைவர்கள் இருந்துள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் இம்மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியை கட்டியெழுப்புவதே எமது இலக்காகும்” என்றார்.

இதேவேளை, மட்டக்களப்பில் நிலவும் பொதுப் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்த பிரதியமைச்சர், மட்டு. டிப்போக்களுக்கு 10 புதிய பேரூந்துகளை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, பயிற்சியளிக்கப்பட்ட 25 சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இச் சந்திப்பில், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வீ.மகேஸ்வரன் காத்தான்குடி அமைப்பாளர் எம்.எம்.முஸ்தபா, தொகுதி மற்றும் மகளிர் பிரிவு அமைப்பாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg