Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கம் இணங்கினால் அடுத்த கட்ட நகர்வுக்கு தயார்: சுமந்திரன்

In இலங்கை
Published: 12:52 GMT, Sep 11, 2017 |
0 Comments
1491
This post was written by : Varshini

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டி கோரிக்கை, வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளும் ஏற்றுக்கொண்டால், அடுத்த கட்ட பேச்சுவாரத்தைக்கு தயாரென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்,

யாழில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

”கடந்த ஒன்றரை வருடங்களாக புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இம் மாதம் 21ம் திகதி புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியாகும். இந்த இடைக்கால அறிக்கை கடந்த வருடம் நவம்பர் மாதம் 19ஆம் திகதி உருவாக்கப்பட்ட அறிக்கையாகும்.

அந்த அறிக்கையில் அரசியல் கட்சிகளின் எழுத்து மூல கருத்துக்களும் உள்ளடக்கப்படும். மேலும் வழிநடத்தல் குழு உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதேபோல் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் தங்கள் கருத்துக்களை கூறியிருக்கின்றது. அதுவும் இடைக்கால அறிக்கையின் ஒரு அங்கமாக வெளிவரும்.

குறிப்பாக, சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறை அமைய வேண்டும், மதசார்பற்ற நாடாக இருக்கவேண்டும், பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டாலும், ஏனைய மதங்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டுமென கோரியிருக்கிறோம். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த அலகாக இருக்கவேண்டும் போன்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாகாண ஆளுநர்களுக்கான அதிகாரங்கள் தொடர்பாகவும் கேட்டுள்ளோம். இடைக்கால அறிக்கையில் இவ்விடயங்கள் வெளிவரவுள்ளதோடு, அதற்கு அரசாங்கத்தின் பிரதான கட்சிகள் இரண்டும் ஒப்புதல் வழங்கினால் அடுத்த கட்டம் தொடர்பாக பேசுவதற்கு நாங்கள் இணக்கம் தெரிவிக்கின்றோம்.

எதிர்வரும் 21ஆம் திகதி இடைக்கால அறிக்கை வெளியான பின்னர் அரசியலமைப்பு பேரவையில் விவாதங்கள் நடைபெறும். அந்த விவாதங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முழுமையான அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg