ட்ரம்பின் பிரித்தானியாவிற்கான முதல் விஜயம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஆரம்பப் பகுதியில் முதல் முறையாக பிரித்தானியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பிரித்தானிய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இதுவொரு அரசமுறை பயணம் அல்ல என்றும் இவ்விஜயத்தை தொடர்ந்து அரசமுறை பயணமொன்றை மேற்கொள்வார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி, அதன் ஒரு அங்கமாகவே பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தகவலை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது. ஆனால், இது தொடர்பில் கருத்து தெரிவிக்க பிரதமர் தெரேசா மே அலுவலகம் மறுத்துள்ளது.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மே வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அதன்போது, பிரித்தானியாவிற்கு அரச பயணம் மேற்கொள்ளுமாறு ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால், ட்ரம்பின் பிரித்தானிய வருகைக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மே-யின் அழைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மேற்கொண்ட விஜயமே, அமெரிக்க ஜனாதிபதியொருவர் பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட இறுதி அரசமுறை சுற்றுப்பயணம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.