வரலாற்றுப் பொக்கிஷங்களை அழிப்பதை நிறுத்துமாறு வேண்டுகோள்!

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் காணப்படும் பூர்வீக வரலாற்றுப் பொக்கிஷங்களான நடுகற்கள், மற்றும் சோதையன் கட்டுக்குளம் என்பனவற்றை அழிப்பதையும், சேதம் விளைவிப்பதையும் தடுத்து நிறுத்துமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஆலங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் குமாரசிங்கம் கேஸ்வரன் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”ஆலங்குளம் கிராமத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகளாக கருங்கல்லால் செதுக்கிச் செய்யப்பட்ட நடு கற்கள் காணப்படுகின்றன. குறித்த பிரதேசத்தில் வண்ணாத்தி என்ற தமிழ் சிற்றரசி ஆட்சி செலுத்தியதாக நம்பப்படுகின்றது.
அப்பிரதேசங்களில் செதுக்கப்பட்ட கருங்கற்களைக் கொண்டு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட நடுகற்கள் மற்றும் சோதையன்கள் என்று நம்பப்படும் குளக் கட்டுக்கள் என்பன காணப்படுகின்றன.
வண்ணாத்தி என்ற புராதன சிற்றரசியின் பெயருடைய பாலத்தில், நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட கருங்கற் தூண்கள் நீர்மட்டத்திலிருந்து சுமார் 10 அடி உயரமானவை.
இத்தகைய கருங்கற் தூண்கள் நாட்டப்பட்டுள்ள எந்த இடத்தை நோட்டமிட்டாலும் அந்த இடத்தின் சூழமைவுக்குள் நீர்த்தடாகம் அமைக்கப்பட்டிருந்ததற்கான தடயங்களைக் காணக்கூடியதாக இருக்கும்.
ஆனால், இவ்வாறான தொல்லியல் பொருட்கள் சிலரால் பிடுங்கி குவிக்கப்பட்டுள்ளன.
மேலும், சோதையன் கட்டுக்குளம் பாரிய இயந்திரங்களைக் கொண்டு இருந்த இடம் தெரியாமல் சமப்படுத்தப்பட்டுள்ளது. ‘சோதையர்கள்’ ஆண்ட இடம் பேய்க்கல் என்றும் சொல்வார்கள்.
இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் ஏன் முன்வரவில்லை என்பது மர்மமாக இருக்கின்றது. இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.