Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான் புகுந்த வீடு புரட்சிகரமானது: சோனியாகாந்தி தெரிவிப்பு!

In இந்தியா
Published: 09:25 GMT, Dec 16, 2017 |
0 Comments
1220
This post was written by : Kemasiya
jj

நான் புகுந்த வீடு மிகவும் புரட்சிகரமான சித்தாந்தத்தை கொண்டது. நாட்டு விடுதலைக்காக சிறை சென்றவர்கள் எனது கணவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ராகுல்காந்தியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ராகுல்காந்தியை நான் புகழ்ந்து பேச மாட்டேன். அவர் எனது மகன். காங்கிரஸ் தலைவராக நான் பேசும் கடைசிக் கூட்டம் இது தான்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் என்னை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்த அதே இடத்தில் நின்று இப்போது நான் பேசுகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை நினைத்துப் பார்க்கிறேன்.

அப்போது நான் தலைவர் பொறுப்பை ஏற்க மிகவும் கவலைப்பட்டேன், எனது கைகள் நடுங்கியது, வரலாற்று சிறப்புமிக்க பெரிய கட்சியை எப்படி வழி நடத்தப்போகிறேன் என்று நினைத்தேன்.

நான் புகுந்த வீடு மிகவும் புரட்சிக்கரமான சித்தாந்தத்தை கொண்டது. நாட்டு விடுதலைக்காக சிறை சென்றவர்கள் எனது கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

நான் மருமகளாக வந்தபோது இந்திராகாந்தி என்னை தனது மகள் போல ஏற்றுக் கொண்டார். அவரை நான் தாயாக கருதி வாழ்ந்தேன். ஆனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது எனது சொந்த தாயாரை இழந்தது போல் உணர்ந்தேன்.

எனது கணவர் படுகொலை செய்யப்பட்டபோது எனக்கு இருந்த ஆதரவு மீண்டும் பறிக்கப்பட்டது போல நினைத்தேன். இந்த நிலையில் தான் என்னை அரசியலுக்கு அழைத்தனர்.

இந்திராகாந்தியும், ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டதால் அரசியலே வேண்டாம் என்றுதான் இருந்தேன். எனக்கும், எனது குழந்தைகளுக்கும் அரசியல் வேண்டாம் என்று நினைத்தேன்.

ஆனால் நேரு குடும்பத்து உறுப்பினராக நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையாக அரசியலுக்கு வருவதை கருதினேன். இந்திரா மற்றும் ராஜீவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

எனது தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆட்சியில் அமர வைக்கும் உரிமையை தந்தனர். அதனால் 2004 முதல் 2014 வரை நல்லாட்சியை வழங்க முடிந்தது. மன்மோகன்சிங் மிகவும் சிறப்பாக ஆட்சியை நடத்தினார்.

மக்கள் நம்மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே கட்சியில் உள்ள அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும்.

தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும். புதிய தலைமை மீது அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும்” என சோனியாகாந்தி உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg