மஹிந்தவை முற்றாக முடக்க மைத்திரி திட்டம்!

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்குள் இருந்து கொண்டே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பிற்கும் ஏனைய வேறு கட்சிகளுக்கும் ஆதரவு வழங்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க சுதந்திக்கட்சி தீர்மானித்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற சுந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவிற்கும் வழங்கப்பட்டுள்ளதாக கட்சித் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மஹிந்த ஆதரவு அணியில் உள்ள சிலர் மைத்திரி அணியுடன் அண்மையில் இணைந்து கொண்டிருந்தனர். அதேபோன்று இன்னும் சிலர் மைத்திரியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
இந்நிலையில், உள்ளூராட்சி தேர்தலின் மூலம் தனது பலத்தினை நிலைநிறுத்த முயற்சி எடுக்கும் மஹிந்த அணியை முடக்கும் செயற்பாடுகளை, சுதந்திரக்கட்சி தீவிரமாக முன்னெடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.