Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணைமுறி அறிக்கை: ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு வெளியானது!

In இலங்கை
Updated: 12:45 GMT, Jan 3, 2018 | Published: 12:45 GMT, Jan 3, 2018 |
0 Comments
1981
This post was written by : Puvanes

மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், மற்றும் அர்ஜுன் அலோசியஸ், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருநாணாயக்க ஆகியோருக்கு எதிரான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஊழல், பாரிய மோசடி, அரச வளங்கள் மற்றும் அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை முடிவுகளை இன்று (புதன்கிழமை) வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், ஆளுநரை நியமித்த அப்போதைய பிரதமர் இந்த விடயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் விசாரணை ஆணைக்குழு வழங்கியுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் ஜனாதிபதி கருத்து வெளியிடும் போது,

அர்ஜுன் மகேந்திரன் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் தலையீட்டினால் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தால் சட்டத்திற்கு முரணான வகையில் பணம் ஈட்டப்பட்டிருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதியன்று இடம்பெற்ற ஏலம் மூலம் மாத்திரம் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் 688 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டியுள்ளதாக குறிப்பிடப்படுவதோடு, மொத்தமாக பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வருமானம் சுமார் 11,145 மில்லியன் ரூபா எனவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியம், ஏனைய அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் 8,529 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மகேந்திரன் தன்னிச்சையான தீர்மானத்தின் ஊடாக பிணைமுறி விநியோகத்தின் போது உள்ளக தகவல்களை பகிரங்கப்படுத்தியுள்ளமைக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அர்ஜுன் மகேந்திரன் தன்னிச்சையாக ஈடுபட்ட தீர்மானத்தின் ஊடாக பிணைமுறியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக பொறுப்பு கூறவேண்டும், அதே சமயம் அர்ஜுன் மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்புடையவர் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தன்னால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவானது தனிப்பட்ட ரீதியில், அரசியல் இலாபமீட்டும் செயல் அல்ல எனவும், எவருடைய அழுத்தத்தின் பேரில் அல்லது பழிவாங்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதல்ல எனவும் ஜனாதிபதி மேலும் தனது விஷேட உரையின்போது தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg