Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுத்தவெற்றி ஆயுதத்தை கையில் எடுத்துள்ள மஹிந்த! – மைத்திரியின் திட்டம் என்ன?

In இலங்கை
Updated: 16:17 GMT, Jan 4, 2018 | Published: 14:26 GMT, Jan 4, 2018 |
0 Comments
1716
This post was written by : Puvanes

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாட்டில் பிரிவினைவாத கருத்துகளை முன்வைத்து, அரசியல் ஆதரவு தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அண்மையில் நடந்த பொதுஜன முன்னணியின் கூட்டத்தின்போது உரையாற்றிய மஹிந்தவின், பிரதான கருத்தாக, “யுத்தத்தை நானே வென்றேன், புதிய அரசியலமைப்பு மூலம் நாட்டை பிளவுபடுத்த திட்டமிடப்படுகின்றது, அதற்கு இடம் கொடுக்கக் கூடாது” போன்றனவே அமைந்தன.

அதன்படி மஹிந்த மீண்டும் மக்கள் மனதில் யுத்த வெற்றியை நினைவுபடுத்துவதோடு, அரசியலமைப்புப்புக்கு எதிரான கருத்துகளையும் முன்வைத்துள்ளார். அவரின் இந்தக்கருத்துகள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாகவே அமைவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

யுத்த வெற்றி வீரனாக தன்னை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் கொண்டு மீண்டும் தென்னிலங்கை மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதே அவரின் முக்கிய திட்டமாக அமைகின்றது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆரம்பத்தில் புதிய அரசியலமைப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துகள், இனவாதக்கருத்துகள் போன்றன அடங்கியுள்ள நிலையில் மீண்டும் அதே ஆயுதத்தை தனது அரசியல் இலாபத்திற்காக மஹிந்த கையில் எடுத்துள்ளார் என்பது இதன் வெளிப்படை.

அதேசமயம் அண்மைக்காலமாக மஹிந்த அணிக்கு ஆதரவு அதிகரித்துவரும் சூழலே காணப்படுகின்றது. இந்த நிலையில் யுத்த வெற்றி நாயகனாக தன்னை பிரகடனப்படுத்தும் மஹிந்தவிற்கு மக்கள் மத்தியில் மேலும் ஆதரவுகள் அதிகரித்தவாரே இருக்கின்றது.

இப்படியான நகர்வில் மஹிந்த அணியை முடக்கவேண்டியது, அல்லது மஹிந்தவுடன் இணைந்துகொள்வது என்பதே சுதந்திரக்கட்சிக்கு உள்ள பிரதான அடுத்தகட்டநகர்வு. எனினும் இணைப்பு என்பது இதுவரையிலும் கேள்விக்குறியே.

இந்தநிலையில் மஹிந்தவை முடக்கும் செயற்பாடுகள் தற்போது திட்டமிட்டு வரப்படுவதை அவதானிக்க முடிவதான அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

அதன் ஆரம்பகட்டமாக நல்லாட்சி மீதும், ரணில் மீதும் சுமத்தப்பட்டுவந்த பாரிய குற்றச்சாட்டான மத்திய வங்கி ஊழல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. இதற்கான முக்கிய காரணம் மஹிந்தவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை இடுவதே.

எவ்வாறாயினும் மஹிந்தவின் தற்போதைய வளர்ச்சியை தடுக்காவிட்டால் அது மைத்திரி, ரணில் தரப்பு ஆட்சிக்கு பாரிய நெருக்கடியாக அமையும் என்பதே வெளிப்படை. இந்த கருத்துக்கு மேலும் வலுவூட்டும் வகையில் நேற்று அமைச்சர் ராஜித கருத்தொன்றினை முன்வைத்திருந்தார்.

அதாவது கடந்தகாலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தார் மேற்கொண்ட டுபாய் வங்கிக் கணக்குகளின் விபரங்கள் கிடைத்துள்ளதாகவும் இதனால் மஹிந்த குடும்பம் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தின் மூலம் மஹிந்தவின் ஊழலை அம்பலப்படுத்த அரசு தீவிரமடைந்துள்ளது என்பது தெளிவாகிவிட்டதாக தென்னிலங்கை புத்திஜுவிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று பிரதமர் மீது மைத்திரி கடும் எச்சரிக்கையினை வெளிப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்தபோதும் உண்மையில், மத்திய வங்கியின் ஊழலுக்கும் பிரதமருக்கும் தொடர்பு இல்லை என்பதே மைத்திரியின் அறிவிப்பின் வெளிப்பாடு.

பிரதமர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளமையும், மத்திய வங்கி ஊழல் விடயத்தில் ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளதும் இதனை உறுதிப்படுத்துகின்றது.

மத்திய வங்கி ஊழலை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், கடந்தகால ஊழல்களை வெளிக்கொண்டுவருவதோ அல்லது விசாரணைகளை மேற்கொள்வதோ நல்லாட்சிக்கு பாரிய சவாலான விடயம் அந்தவகையில் தற்போது அரசாங்கம் வெற்றியடைந்து விட்டது எனலாம்.

அதன்படி இப்போதைய தென்னிலங்கை அரசியல் பல்வேறு முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்தும் காலமாக அமையும் காரணம் அடுத்தடுத்து தேர்தல்கள் இடம்பெரும் காலகட்டமாகவே இனிவரும் காலம் அமையப்போகின்றது.

குறிப்பாக தன்னை எதிர்த்து கட்சி ஆரம்பிப்பவர்களின் இரகசியங்களை அம்பலப்படுத்தி வீதியில் அலையவிடுவேன் என மைத்திரி பொது மேடையில் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். இது மஹிந்த அணிக்கு அவர் வெளியிட்ட எச்சரிக்கை என்பது குறிப்பிடத்தக்கவிடமாகும்.

எனவே அடுத்த தென்னிலங்கை அரசியலில் மஹிந்தவிற்கு பாரிய நெருக்கடிகளை அரசு ஏற்படுத்தும் என்றே தென்னிலங்கை அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg