நிபுணத்துவம் உள்ளவர்களாலேயே மக்களுக்குச் சேவை செய்ய முடியும்: சத்தியலிங்கம்

நிபுணத்துவம் உள்ளவர்களால் நீண்டகாலத் திட்டங்களைத் தயாரித்து மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படைத் தேவைகள் குறித்த சேவைகளை வழங்கமுடியும் என வட மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா, பண்டாரிக்குளத்தில் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் க.சுமந்திரனை ஆதரித்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளாக இருக்கவேண்டியவர்கள் யார் என்பது பிரச்சனையில்லை. படித்தவர்கள் விடய ஞானம் உள்ளவர்கள், நிபுணத்துவம் உள்ளவர்கள் இந்த சபையில் இருக்கும் போதுதான் நீண்டகால திட்டங்களை தயாரித்து அந்த சபையினூடாக மக்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை தேவைகள் சேவைகளை வழங்கமுடியும்.
அதனூடாகவே ஏனைய நாடுகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள்போல் எமது நாட்டிலும் சிறப்பாக செயற்பட முடியும். அதனைவிடுத்து படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று இல்லை.படிக்காத விடயஞானம் இல்லாதவர்கள்தான் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் போவதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் உள்ள எங்கள் மாவட்டத்தை சேர்ந்த சிலரும் பிரதேச சபைக்கே பொருத்தமானவர்கள்.
எனவே மக்கள் இதனை தீர்மானித்துக் கொள்ளவேண்டும். ஆனால் எங்கள் கட்சியை பொறுத்தவரை பிரதேசசபையோ, நகரசபையோ, மாகாணசபையோ, நாடாளுமன்றமோ விடயஞானமும் படித்தவர்களும் மக்களில் அக்கறை கொண்டவர்களும் தங்களது நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தை மக்களுக்காகச் செலவு செய்யக்கூடியவர்களும் ஊழல் அற்றவர்களும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.