Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டுமே வாக்குக் கேட்பதற்கு யோக்கியமற்றவை: சிறிநேசன்!

In இலங்கை
Updated: 06:59 GMT, Jan 12, 2018 | Published: 04:35 GMT, Jan 12, 2018 |
0 Comments
1197
This post was written by : Ravivarman

பெரும் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ தமிழ் மக்கள் மத்தியில் வாக்குக் கேட்பதற்கு யோக்கியமற்ற கட்சிகளாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்காக திருப்பழுகாமம் வட்டாரத்தில் போட்டியிடும் இ.கந்தசாமி, மற்றும் வி.ஆர். மகேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் கட்சியின் காரியாலயம் நேற்று (வியாழக்கிழமை) மாலை திருப்பழுகாமத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காக பணத்தைக் கொடுத்து கொள்வனவு செய்வதற்கும், பதவியைக் கொடுத்துக் கொள்வனவு செய்வதற்கும், பயமுறுத்திப் பார்த்தும், பணயம் வைத்தும், இறுதியாகப் படுகொலைகளையும் செய்து பார்த்தார். ஆனால் இதில் எதற்குமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடிபணியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தைப் பேண வைப்பதற்காக கூட்டமைப்பின் பல சிரேஸ்ட தலைவர்கள் அவர்களது உயிரை மாய்த்திருக்கின்றார்கள்.

யோசப் பரராஜசிங்கம் தேவாலயத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார், ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார், சிவனேசனை கிளைமோர் குண்டு வைத்து தாக்கி கொலை செய்தார்கள், சந்திரநேருவைப் படுகொலை செய்தார்கள், இவ்வாறு பல படுகொலைகளைச் செய்தும்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர்களால் இன்றுவரை அசைக்க முடியாமல் போய்விட்டது.

ஜே.வி.பி கட்சியை உடைத்தார்கள், ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தார்கள், தோட்டத் தொழிலாளர்களை உடைத்தார்கள், முஸ்லிம் கட்சிகளை உடைத்தார்கள், அவர்களால் உடைக்க முடியாமல் இருக்கின்ற கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு சோரம் போகின்ற கட்சியல்ல, பணத்திற்கு விலைபோகின்ற கட்சியல்ல, பதவிக்காக தம்மை இழந்துபோகின்ற கட்சி அல்ல, உண்மைக்காக, உரிமைக்காக, மக்களோடு மக்களாக இருந்து கொண்டு, சோதனைகள் வந்தாலும், வேதனைகள் வந்தலும், அதனை அசைக்க முடியாத கட்சிதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை வரலாறு கூறியிருக்கின்றது.

கடந்த காலங்களில் ஒவ்வாரு கட்சிகளும் எமக்கு இழைத்த அநீதிகளை எமது மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும், கொக்கட்டிச்சோலைப் படுகொலை, மகிழடித்தீவு படுகொலை, மையிலந்தனைப் படுகொலை, குமுதினிப் படகு படுகொலை, நாகர்கோயில் படுகொலை, செஞ்சோலைப் படுகொலை, புதுக்குடியிருப்பு படுகெலை, சத்திருக்கொண்டான் படுகொலை, வந்தாறுமூலைப் படுகொலை, என எமது மக்களைப் படுகொலை செய்தார்கள்.

ஆனால் இந்தப் படுகொலைகளைச் செய்த அனைவரும் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றார்கள். இவைகளனைத்தும் இந்த உலகத்தின் பார்வையில் செய்யப்பட்டதாகும்.

ஆனால் நீதிதேவதை இன்னும் கண்ணைத் திறக்கவில்லை, கண்ணைத் திறப்பதற்கு இந்தப் பெரும் தேசியக் கட்சிகள் இன்னும் வாப்புக் கொடுக்கவில்லை. எனவே ஐக்கிய தேசியக் கட்சியோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ தமிழ் மக்கள் மத்தியில் வாக்குக் கேட்பதற்கு யோக்கியமற்ற கட்சிகளாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

IMG_1155 IMG_1147 IMG_1133

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg