Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குளிர்கால ஒளிம்பிக்கில் துளிர்விடும் எதிர்ப்பார்ப்புகள் – வடகொரிய தென்கொரிய சமாதானம்

In
Updated: 15:14 GMT, Jan 13, 2018 | Published: 15:10 GMT, Jan 13, 2018 |
0 Comments
1097
This post was written by : srikkanth

-சதீஸ் கிருஸ்ணபிள்ளை

அந்த ஜோடி அழகானது. அவள் வயது 19ஐ எட்டுகிறது – அவனுக்கு 25 வயது.

உலகப் புகழ்பெற்ற பீட்டில்ஸ் இசைக்குழுவின் படைப்பு வாத்திய வடிவமாக ஒலிக்கிறது.

பனிச்சறுக்கல் திடலில் லாவகமாக சறுக்கிச் செல்கிறார்கள். கரம் பற்றி சுழல்கிறார்கள். மீன்களாகத் துள்ளுகிறார்கள். பிகர் ஸ்கேட்டிங் திடல் முழுவதும் உற்சாகம். பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கிறது.

அவள் பெயர் ரையொம் தே-ஒக். அவன் பெயர் கிம் ஜூ-சிக். இருவரும் வடகொரியாவைச் சேர்ந்தவர்கள்.

ஒரு தனித்து விடப்பட்ட தேசத்தின் கவலை இல்லை. ஒட்டுமொத்த உலகையும் கவர்ந்திழுக்கும் திறமை இருக்கிறது. வசீகரம் இருக்கிறது.

அடுத்த மாதம் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி. அதில் தமது தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமை ரையொமிற்கும், கிம்மிற்கும் உண்டு. கூடவே சில பொறுப்புக்களும் உள்ளன.

es-map-korea-composite-map123

1950களில் சண்டையிட்டு வடக்காகவும், தெற்காகவும் பிரிந்து நிற்கும் தேசங்கள். வடக்கில் இருந்து வேலி தாண்டி தெற்கிற்கு சென்று விளையாடி தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பது முதன்மைப் பொறுப்பு.

வடகொரியாவின் நேச முகமாக பகைமை ஒழித்து, அயல் தேசத்துடன் நல்லுறவை ஏற்படுத்த பாதை அமைக்கும் அரசியல் பொறுப்பும் ரையொம் – கிம் ஜோடிக்கு உள்ளது.

பொறிக்குள் சிக்கியிருக்கும் வடகொரியா

இந்த ஜோடியின் தேசம் சிறப்பானதாக இல்லை. அரசியல். இராணுவ, பொருளாதார பொறிகளுக்குள் சிக்கியிருக்கிறது.

ஒரு கம்யூனிஸ தேசமாக சீனாவின் செல்வாக்குடன் தனித்து இயங்குவதால் முதலாளித்துவ நாடுகள் அரசியல் ரீதியாக பகைக்கின்றன. வடகொரியாவிற்கு எதிராக தென்கொரியாவை ஏவிவிட்டு வேடிக்கை பார்கிறது அமெரிக்கா.

எவருக்கும் அடிபணிய மறுக்கும் பிடிவாதத்துடன் அணுவாயுதங்களை உருவாக்கிப் பரிசோதிப்பதால், சுற்றியுள்ள நாடுகளில் இருந்து இராணுவ ரீதியிலான அச்சுறுத்தல்.

அமெரிக்காவும் தென்கொரியாவும் நிலைப்படுத்தியுள்ள தாட் ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்புத் திட்டத்திற்கு அப்பால், ஜப்பானிய பீரங்கிகளும் வடகொரியாவை நோக்கி திசை திருப்பப்பட்டிருக்கும்.

வடகொரியாவின் அணுவாயுதங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் அச்சுறுத்தல் என்பது அமொரிக்காவின் குற்றச்சாட்டு. இதற்காக, ஐக்கிய நாடுகள் என்ற கட்டமைப்பைப் பயன்படுத்தி வடகொரியா மீது அடிக்கடி விதிக்கப்படும் தடைகளால் பெரும் பொருளாதார நெருக்கடிகள்.

இந்த மூன்று கோணங்கள் சார்ந்த பிரச்சனைகளால், கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பலப்பரீட்சைகள் உச்சத்தைத் தொட்டிருந்தன.

கிம் – ட்ரம்ப் பலப்பரீட்சை

அமெரிக்காவின் மையப் பகுதியைத் தாக்கும் வல்லமை கொண்ட அணுவாயுத ஏவுகணையை வடகொரியா பரீட்சித்ததைத் தொடர்ந்து பிரச்சனை தொடங்கியது.

“எனது மேசையில் அணுவாயுதத்திற்கான சுவிட்ச் இருக்கிறது” என்று வடகொரியத் தலைவர் கிம் யொங் உன்னும் எனது சுவிட்ச் அதைவிடப் பெரியது என்று டொனல்ட் ட்ரம்ப்பும் சொல்லி சிறுபிள்ளைகளாக சண்டை பிடித்தார்கள்.

இருவரும் ஊகிக்க முடியாதவர்கள். வடகொரியத் தலைவர் எதிர்பாராத விதமாக ஏதேனும் செய்து விட்டால், ட்ரம்ப்பும் சும்மா இருக்க மாட்டார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டார்கள்.

இதன் காரணமாக, கொரிய தீபகற்பத்தில் அணுவாயுதப் போர் குறித்த அச்சம் தீவிரம் பெற்றிருந்தது.

ஆனால், புதுவருடத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கிம், தென்கொரியாவுடன் பேசத் தயார் என்று சொன்னார். பெப்ரவரி மாதம் தெற்கின் பியொங்சொங் நகரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு தமது போட்டியாளர்களை அனுப்பப் போவதாக அறிவித்தார்.

ட்ரம்ப் முறைத்துக் கொண்டிருக்கையில், கிம் முகத்தைத் திருப்பி, தென்கொரிய ஜனாதிபதியை நோக்கி நேசச்கரம் நீட்டிய விதம் வித்தியாசமாக இருந்தது.

இந்த ராஜதந்திரத்தில் கிம் வெற்றி பெற்றார். ட்ரம்ப் அடிபணிந்தார். கிம்முடன் தனிப்பட்ட ரீதியிலும் பேச முடியும் என ட்விற்றரில் பதிவிட்டார்.

நெகிழ்வுச் சூழலும் கடந்த கால கசப்புணர்வுகளும்

இன்று வடகொரியா விவகாரத்தில் அரசியல் ரீதியான நெகிழ்வுத் தன்மை உருவாகியிருக்கிறது.

தமது முன்னோடிகளைப் போலல்லாமல் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் வடகொரியாவுடனான நட்புறவுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு இடமளித்துள்ளார். வடக்கு-தெற்கு தொலைபேசி சம்பாஷணைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

இன்று சூழ்நிலை சாதகமாக இருந்தாலும், வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான 65 தசாப்த கால கசப்பணர்வுகள் நீடிக்கின்றன. கொள்கை ரீதியான வேறுபாடுகள் தொடர்கின்றன. போர் ஏற்படுத்திய காயங்களின் வடுக்கள் ஆறவில்லை.

இரு தேசத்து மக்கள் மத்தியிலும் நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமானால், மனங்களில் கருத்து ரீதியான மாற்றம் அவசியம். உறவு குறித்த நம்பிக்கையை விதைக்க வேண்டும்.

இந்நிலையில், பியொங்சொங் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தென்கொரியா செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள ரையொம் – கிம் ஜோடியால் விதைகளைத் தூவ முடியுமா?

இது சாத்தியம் என்பதையே கடந்த கால அனுபவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

பிங்பொங் ராஜதந்திரம்

PinPong Diplomacy123

1971ம் ஆண்டு. பனிப்போர் தீவிரம் அடைந்திருந்த காலகட்டம். அமெரிக்காவும், சீனாவும் ஒன்றுடனொன்று கீரியும் பாம்பாக இயங்கிக் கொண்டிருந்தன.

ஜப்பானில் சர்வதேச ரீதியிலான ரேபிள் ரெனிஸ் சுற்றுத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அமெரிக்க இளைஞர் ஜோன் கொவான் தமது பஸ்ஸைத் தவற விட்டார். பின்னால் சீன வீரர்களின் பஸ் வந்தது. ஜோன் தொற்றிக் கொண்டார்.

சீன பஸ்ஸில் ஸூவாங் என்ற இளைஞர். ஆங்கிலம் தெரியாது. ஆனால், ஜோனுடன் பேச வேண்டும் என்ற ஆவல். மொழிபெயர்ப்பாளர் ஊடாக பேசினார். ஸூவாங் –  ஜோன் கொவான்  இருவருக்கும் இடையில் நட்பு துளிர்த்தது.

இருவரும் தொடர்ந்து சந்தித்தார்கள். சீனாவின் பட்டுத்துணியை ஜோனுக்கு பரிசளித்தார் ஸூவாங். பதிலாக, ஜோன் அமைதியின் குறியீட்டுடன் கூடிய ரீ-ஷேர்ட்டை சீன நண்பருக்கு வழங்கினார்.

இந்த நட்பின் புகைப்படங்கள் பரவலாக பிரசுரிக்கப்பட்டன. அரசுகள் பகைமை பூண்டிருந்தாலும், மக்களின் மனங்கள் கனிந்தன. சீனத் தலைவர் மாவோ சேதுங் அமெரிக்க குழுவை சீனாவிற்கு அழைத்தார். அடுத்தாண்டு, அமெரிக்க ஜனாதிபதி ரொபர்ட் நிக்சன் சீனாவிற்கு விஜயம் செய்தார். இந்த மாற்றத்தைத் தொடர்ந்து 1979இல் அமெரிக்காவும் சீனாவும் ராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தன.

விளையாட்டும் அரசியலும்

விளையாட்டும் அரசியலும் கலக்கக் கூடாது என்பார்கள். ஆனால், விளையாட்டின் மூலம் அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்க ஆரம்பப் புள்ளி இடலாம்.

அமெரிக்க – ஈரானிய மல்யுத்த வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட நட்புறவைத் தொடர்ந்து, அமெரிக்க வீரர்கள் ஈரான் சென்றார்கள். இங்கு ஈரான் பற்றி தாம் கொண்டிருந்த கருத்து பெருமளவில் மாறியதென அமெரிக்க வீரர்கள் கூறினார்கள்.

தென்னாபிரிக்காவின் தலைவர் நெல்சன் மண்டேலா, ரகர் விளையாட்டுத் திடலில் வெள்ளையின வீரர்களை அரவணைத்து வாழ்த்தியதன் மூலம், கறுப்பினத்தவர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்.

ரையொன்-கிம் ஜோடியின் வசீகரம் வடகொரியாவின் இறுக்கமான முகத்தைத் தாண்டியது. இவர்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் அன்புடன் வரவேற்கிறது.

எனவே இவர்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

முடிவு

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg