Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அழிவு என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது! – ஆனால் எப்போது?

In
Updated: 14:33 GMT, Feb 17, 2018 | Published: 14:20 GMT, Feb 3, 2018 |
0 Comments
1233
This post was written by : Puvanes

புனித பைபிள் வாழ்க்கைக்கான போதனைகளை கூறுவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தைக் கூறும் தீர்க்க தரிசனமாகவே காணப்படுகின்றது. பைபிளில் இப்போதைய உலகின் நடப்பு மட்டுமல்லாமல் அடுத்து நடக்கப்போவதையும் தீர்க்கதரிசனங்களாக கூறப்பட்டுள்ளது.

உலகம் செல்லும் பாதை மட்டுமல்லாது எதிர்காலத்தில் இப்படித்தான் உலகம் அமையப்போகின்றது எனவும் பைபிள் தெளிவாகக் கூறியுள்ளது. அப்படியாக பைபிளில் கூறப்பட்டுள்ள தீர்க்க தரிசனங்களைப் பார்க்கலாம்.

ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும், அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும் நிலநடுக்கங்களும் ஏற்படும். (மத்தேயு 24:7)

‘கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள். ஏனென்றால், மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, கடவுளை நிந்திக்கிறவர்களாக, அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, உண்மையில்லாதவர்களாக, பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, நம்பிக்கைத் துரோகிகளாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக இருப்பார்கள்.’ (2 தீமோத்தேயு 3: 1-4)

பைபிள் கூறியுள்ள இந்த தீர்க்க தரிசனங்கள் தற்போதைய உலகை படம்பிடித்துக்காட்டுவதாகவே அமைகின்றது. உலகம் தான்தோன்றித்தனமாக இயங்குவதையும், மனிதர்கள் தமது கட்டுப்பாடுகளை இழந்து வாழ்ந்துகொண்டு வருகின்றனர் என்பதனை பைபிள் தெளிவுபடுத்துகின்றது.

பைபிளின்படி, பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கான சக்தி மனிதர்களுக்கு இல்லை என்பதையும் பைபிள் வசனங்கள் காட்டுகின்றன:

மனுஷனுக்குச் சரியென்று தோன்றுகிற வழி உண்டு. ஆனால், அது கடைசியில் மரணத்தில்தான் கொண்டுபோய்விடும். (நீதிமொழிகள் 14:12)

மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது. (பிரசங்கி 8:9.)

மனுஷனுக்கு தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை. (எரேமியா 10:23)

மனிதர்கள் தங்கள் இஷ்டப்படி செய்துகொண்டிருந்தால், இந்த உலகம் ஒருவேளை அழிந்துவிடலாம். ஆனால், அது நடக்கவே நடக்காது! ஏன்? அதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது:

கடவுள் “இந்தப் பூமிக்குப் பலமான அஸ்திவாரம் போட்டிருக்கிறார். அது ஒருபோதும் அசைக்கப்படாது.” (சங்கீதம் 104:5)

“ஒரு தலைமுறை போகிறது, இன்னொரு தலைமுறை வருகிறது. ஆனால், பூமி என்றென்றும் நிலைத்திருக்கிறது.” (பிரசங்கி 1:4)

“நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”—சங்கீதம் 37:29.

“பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும். மலைகளின் உச்சியில்கூட அது நிரம்பி வழியும்.”(சங்கீதம் 72:16)

உலகம் அழியுமா என்ற கேள்விக்கு இந்த பைபிள் வசனங்கள் தெளிவான பதிலைத் தருகின்றன. தூய்மைக்கேடோ, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையோ, உயிர்கொல்லி நோய்களோ மனித இனத்தை அழித்துவிட முடியாது. அணு ஆயுத போர்களாலும் இந்த உலகத்தை அழித்துவிட முடியாது.

ஏனென்றால், இந்தப் பூமியின் எதிர்காலம் கடவுளுடைய கையில்தான் இருக்கிறது. சுயமாகத் தீர்மானிக்கும் உரிமையைக் கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். மனிதர்கள் தாங்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கான விளைவுகளை சந்திப்பார்கள். இந்த உலகம், கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ஒரு ரயிலைப் போல இல்லை. அது, கட்டுக்கடங்காமல் அழிவை நோக்கி போய்க்கொண்டில்லை. மனிதர்களால் இந்தப் பூமியை ஓரளவுதான் நாசப்படுத்த முடியும்; கடவுள் அதற்கு ஓர் எல்லையை வைத்திருக்கிறார்.(சங்கீதம் 83:18; எபிரெயர் 4:13)

கடவுள் இன்னும் என்னவெல்லாம் செய்வார்? “அளவில்லாத சமாதானத்தை” கொண்டுவருவார். (சங்கீதம் 37:11) ஒளிமயமான ஓர் எதிர்காலத்தைப் பற்றி லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் பைபிளைப் படித்து தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அந்த எதிர்காலத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் சில விஷயங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். இவர்கள் வித்தியாசமான பின்னணியிலிருந்து வந்தவர்கள். இவர்களில் ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என எல்லா வயதிலுள்ள மக்களும் இருக்கிறார்கள். ஒரே உண்மையான கடவுளை இவர்கள் வணங்குகிறார்கள். பைபிளில் அவருடைய பெயர் யெகோவா என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இவர்கள் எதிர்காலத்தை நினைத்து பயப்படுவதில்லை. ஏனென்றால், பைபிள் இப்படிச் சொல்கிறது: “யெகோவாதான் உண்மையான கடவுள்; அவரே வானத்தைப் படைத்தார். அவரே பூமியை உருவாக்கி, அதை உறுதியாக நிலைநிறுத்தினார். அவர் அதைக் காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார். அவர் சொல்வது இதுதான்: ‘நான் யெகோவா, என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.’”—ஏசாயா 45:18.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg