Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோப்பாய் கொள்ளைச் சம்பவம்: சுதர்சிங் விஜயகாந்திற்கு கடூழிய சிறைத்தண்டனை!

In இலங்கை
Updated: 11:16 GMT, Mar 8, 2018 | Published: 11:04 GMT, Mar 8, 2018 |
0 Comments
1243
This post was written by : Varshini

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில், முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஒருவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ஒவ்வொருவரும் தலா 7 லட்சம் ரூபாய் வீதம் 21 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என்றும், அத்தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி உத்தியோகத்தர் ஒருவரின் வீடொன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெருமளவு நகைகள் கொள்ளையிடப்பட்டன. குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று சில தினங்களுக்குப் பின்னர், சம்பந்தப்பட்ட வங்கி உத்தியோகத்தர் பணிபுரியும் வங்கியிலேயே அடகு வைப்பதற்கும் முயற்சித்துள்ளனர். நகைகளை அடையாளம் கண்டுகொண்ட வங்கி உத்தியோகத்தர் வழங்கிய தகவலின் பிரகாரம் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இவர்கள் நால்வர் மீதும் நகைகளை கொள்ளையடித்தமை, கொள்ளையடித்த நகைகளை உடைமையில் வைத்திருந்தமை, அவற்றை அடகு வைக்க முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு கோப்பாய் பொலிஸாரால் யாழ். நீதவான் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் தொடர்ந்த விசாரணைகளின் பின்னர் நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகளென அறிவித்தது. அதன் பிரகாரம் இன்றைய தினம் இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட சுதர்சிங் விஜயகாந்த், யாழ். மாநகர சபைக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg