Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’

In இலங்கை
Updated: 05:15 GMT, Mar 17, 2018 | Published: 02:51 GMT, Mar 17, 2018 |
0 Comments
1644
This post was written by : Arun Arokianathan

கிரிக்கட் கனவான்களின் விளையாட்டு என்பதைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நேற்று கொழும்பு கெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறியுள்ளன.

நேற்றைய பரபரப்பான போட்டியில் தாயக மண்ணிலேயே இலங்கையிடம் இருந்து சுதந்திரக்கிண்ணத்தைப் பறித்தெடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கட்டுக்களால் வெற்றிபெற்று இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றமையைக் கூட மறக்கும் வகையில் மைதானத்தில் இடம்பெற்ற மோதல்கள், வாக்குவாதம், சர்ச்சைகள் அமைந்திருந்தன .

இந்த உணர்வுபூர்வமான நிலைமையால் கெத்தாராம மைதானத்தில் பங்களாதேஷ் அணியினர் தங்கியிருந்த அறையின் கண்ணாடிகளும் நொருங்கிக்கிடந்தமை கலவரமொன்று அரங்கேறியதைப் போன்ற உணர்வைத்தந்தது.

பங்களாதேஷ் அணி நேற்று பதிலளித்து துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது பங்களாதேஷ் அணி வெற்றிபெறுவதற்கு கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவையாக இருந்தன. கடைசி ஓவரை இசுறு உதான வீசியபோது முதல் பந்து பவுன்சர் முஸ்தபிசுர் ரஹ்மான் தோள்பட்டைக்கு மேல் சென்றது. அதற்கு நடுவர் ‘நோ-பால்’ கொடுக்கவில்லை. ஓட்டமும் இல்லை. 2வது பந்தும் அதே மாதிரி செல்ல நடுவர் உயரமாகச் சென்றதற்கான ‘நோ-பால்’ கொடுக்கவில்லை. உண்மையில் ‘நோ-பால்’ கொடுத்திருக்க வேண்டும்.

அணித்தலைவர் மஹ்முதுல்லா நடுவர்களிடம் ‘நோ-பால்’ கொடுக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்படிக் கொடுத்திருந்தால் 5 பந்துகளில் 11 ஓட்டங்கள் தேவை என்று ஆகியிருக்கும் ஆனால் மாறாக 4 பந்துகளில் 12 ஓட்டங்கள் என்ற இக்கட்டு ஏற்பட்டது. லெக் அம்பயர் நோ-பால் சிக்னல் செய்ததாக ஆட்டம் முடிந்தவுடன் தமிம் இக்பால் கூறினார். சர்ச்சையான அதே 2ம் பந்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் ஒரு ‘பை’ ரன் எடுக்கலாம் எனும் முயற்சியில் ‘ரன் அவுட்’ ஆக 4 பந்துகளில் 12 ஓட்டங்கள் தேவை. மஹ்முதுல்லா சாமர்த்தியமாக முஸ்தபிசுர் ரஹ்மானை அழைத்து ஒரு  ஓட்டம் ஓடியதால் ஸ்ட்ரைக் இவர் கைக்கு வந்தது.

அடுத்த உதான பந்து வைடாக வீசப்பட்டது. விட்டிருந்தால் அது வைடுதான் ஆனால் மஹ்முதுல்லா அதனை கவர் திசையில் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்து தாழ்வான புல்டாஸ் 2 ஓட்டங்க்ள. வெற்றிக்குத் தேவை 6 ரன்கள்இ கைவசம் 2 பந்துகள் மீதமுள்ளன. இப்போது மிடில் அண்ட் லெக்கில் ஒரு ஃபுல் பந்து விழ பேகவர்ட் ஸ்கொயர் லெக் மேல் சிக்ஸ் தூக்கினார் மஹ்முதுல்லா, புயலுக்குப் பின்னே அமைதி இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் முன்னேறியது.

மஹ்முதுல்லா நடுவர்களிடம் நோ-பாலுக்காக வாதிட்டுக் கொண்டிருந்த போது பங்களாதேஷ் பதிலி வீரர் குளிர் பானத்துடன் களத்துக்குள் வந்தார். அவர் சும்மாயில்லாமல் இலங்கை வீரர்களுடன் ஏதோ வாக்குவாதம் புரிந்தார். இதனால் பொறுக்கமாட்டாமல் இலங்கை வீரர் அந்த பதிலி வீரரை தள்ளினார். இது  பங்களாதேஷ் வீரர்களை கொதிப்படையச் செய்ய  அணித்தலைவர் ஷாகிப் அல் ஹசன் மாடியிலிருந்து இறங்கி எல்லைக்கோட்டருகே வந்தார். அங்கு ஏதோ வாக்குவாதம் நிகழ களத்திலிருந்த மஹ்முதுல்லாவையும் ரூபல் ஹுசைனையும் மைதானத்தைவிட்டு வெளியேறுமாறு அழைத்தார். அப்போதுதான் கலீத் மஹ்மூத் ஆட்டத்தை முடித்து விட்டு வாருங்கள் என்று மஹ்முதுல்லாவுக்கு அறிவுறுத்தினார். இத்தோடு முடிந்ததா? மஹ்முதுல்லா வென்றவுடன் பங்களாதேஷ் வீரர்கள் குழுமி அதே  நாகப் பாம்பு படமெடுக்கும் அபிநய நடனத்தை ஆட இம்முறை இலங்கையின் குசல் மெண்டிஸ்   பங்களாதேஷ்  வீரர்களை நோக்கி கோபமாகச் செய்கை செய்ய தமிம் இக்பால் அவரைச் சமாதானப்படுத்தினார். மொத்தத்தில் தெருக்கிரிக்கெட்டில் நடக்கும் சண்டை போல் இருந்தன இந்தக் காட்சிகள்.

இலங்கை அணி பங்களாதேஷ் தொடருக்குச் சென்ற போது ஒருவிதமான  நாகப் பாம்பு படமெடுக்கும் அபிநய நடனத்தை  ஆடி இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் கேலி, கிண்டல் செய்து வந்ததிலிருந்து இரு அணிகளுக்கும் இடையே இந்தப் பகைமை வளர்ந்து வந்துள்ளதாக அறியமுடிகின்றது.

அத்தோடு இறுதிபோட்டிக்கு முன்னேறிய வெற்றி களிப்பில் இருந்த பங்களாதேஷ் அணியின் வீரர்கள். ஓய்வறையில் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுதவிர மைதானத்தில் இருந்த பங்களாதேஷ் இரசிகர்களுக்கும், இலங்கை இரசிகர்களுக்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg