மியன்மாருக்கு திரும்பிய ரோஹிங்கியா அகதிக் குடும்பம்
மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் நிலவிய வன்முறையால் பாதிக்கப்பட்டு பங்களாதேஷில் தஞ்சம் கோரியிருந்த ரோஹிங்கியா அகதிக் குடும்பமொன்று, தமது சொந்த இடத்துக்குத் திரும்பியுள்ளதாக, மியன்மார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஹினி மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் ஆரம்பித்த வன்முறை காரணமாக, ரோஹிங்கியா அகதிகள் சுமார் 7 லட்சம் பேர், அயல் நாடான பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளனர்.
இவர்களைச் சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்புவது தொடர்பாக, மியன்மார் மற்றும் பங்களாதேஷ் அதிகாரிகளுக்கிடையில் கடந்த வருட இறுதியில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. எனினும், தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத பட்சத்தில், தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச்செல்ல ரோஹிங்கியா அகதிகள் மறுத்துவருகின்றனர்.
இவ்வாறான நிலையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமொன்று ராஹினி மாநிலத்துக்கு முதன்முதலாக நேற்று (சனிக்கிழமை) திரும்பியுள்ளதுடன், இவர்களுக்குத் தேவையான நிவாரணப்பொருட்களை மீள்குடியேற்ற அமைச்சு வழங்கியுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அத்துடன், மியன்மாரினுள் நுழையும் ரோஹிங்கியா அகதிகளைச் சரிபார்க்கும் நோக்கில், தேசிய விதிமுறை அட்டை வழங்கும் நடவடிக்கையை மியன்மார் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், இந்தக் குடும்பத்துக்கு மேற்படி அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.