Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….

In இலங்கை
Updated: 12:50 GMT, Apr 19, 2018 | Published: 12:50 GMT, Apr 19, 2018 |
0 Comments
1452
This post was written by : Puvanes

மற்றவர்களுக்காக தன் உயிரையே காவு கொடுக்கும் விலை மதிப்பற்ற குணமுடைய மனித வர்க்கத்திற்கு  மனித உயிரையே காவு கொள்ளும் விஷக் குணமும் உண்டு.

மனித உயிர் பெறுமதி மிக்கது. அவ்வாறான மிக முக்கியமான உயிரையே மற்றவர்கள் மன சாந்தியுடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காகத் துச்சமாகக் கருதி மாண்டவர்கள் இறந்தும் வாழும் சிரஞ்சீவிகள் என்ற பெருமைக்கு உரியவர்கள்.

இலங்கைத் தாய் தனது குழந்தைகள் பலர் தன் கண் முன்னேயே கதறக் கதறச் சாகடிக்கப் படுவதனைப் பார்த்துப் பார்த்தே மனம் வெதும்பிப் போனாள். அவள் கண்ட கோரங்களும் கொடுமைகளும் ஏராளம். அவள் பெற்றெடுத்த பிள்ளைகளிலும் ராட்சத எண்ணங்கள் தோன்றி விட்டது.

மனம் நொந்திருந்தவளுக்கு மாமருந்தாகக் கிடைத்த குழந்தைகளும் உண்டு. அந்தப் பெருமைக்குரிய குழந்தைகளில் ஒன்று “அன்னை பூபதி” அன்னை என்ற அடைமொழிக்கு மிகவும் பொருத்தமானவர் மறைந்தும் மக்கள் நெஞ்சில் மாறாது பதிந்த மாணிக்கம்.

அவரின் அன்றைய தியாகம் இன்றைக்கும் நெஞ்சில் பதிந்து கண்ணில் நீரைக் கோர்க்கச் செய்யும். உதவி என்று கேட்டாலே ஒன்பதடிக்குப் பாயும் மனிதர்க்கு மத்தியில் உயிரையே கொடுத்த பெண் தெய்வம் பூபதியம்மா.

இன்றைய இளைய சமுதாயத்தில் அநேகமானவர்களுக்கு அன்னையின் தியாகம் பற்றித் தெரிந்திருக்காது. அது எத்தகையதொரு வேதனைக்குரிய விடயம். இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராகச் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பெண்மணியவர்.

மட்டக்களப்பில் 1932 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் திகதி பூ ஒன்று பூமியில் மலர்ந்து மணம் பரப்பியது. அன்று யாருக்கும் தெரிந்திருக்காது மலர்ந்த மலர் வாடி வதங்கும் என்பது.

பூபதியம்மா பெற்றெடுத்த முத்துக்கள் பத்து. அன்னையின் வயிற்றில் பிறந்ததால் பிறவியின் பயனை முழுவதுமாக அவர்கள் அடைந்திருப்பார்கள்.

இப்படியொரு தியாக உள்ளம் படைத்த அன்னை தன் பிள்ளைகளை எவ்விதம் போற்றிப் பாதுகாத்திருப்பார். மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராகப் பூபதியம்மா சேவையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப் படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலத்திலேயே பூபதியம்மா அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராகத் திகழ்ந்தார்.

நாட்டில் எந்தப் படையினருக்கு இடையில் யுத்தம் நிகழ்ந்தாலும் பலியாவது பாவப்பட்ட பொது மக்கள் என்பதென்னவோ இறைவன் கொடுத்த சாபம் தான் அதைப் பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் கிடையாது. போவதென்னவோ பொதுமக்களின் உயிர் தானே அது பொதுவான உயிர் தானே எப்படியும் போனால் நமக்கென்ன என்று சிந்திக்கும் சுயநலப் பிசாசுகள் இலங்கையை இறுக்கிக் கொண்டு விட்டது.

விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப் படைக்கும் இடையே யுத்தம் நடக்க, நாட்டில் ஏராளமான உயிர்கள் கொன்று குவிக்கப்பட, உயிரற்ற உடல்கள் சிதைக்கப்பட என சகிக்க முடியாத விடயங்கள் அரங்கேறிய காலத்தில் திரை மறைவில் இருந்தவர்களை வெளிக் கொணரும் வழி தெரிந்திருக்கவில்லை யாருக்குமே….

இந்த அநியாயங்களைத் கண்டு பொங்கி எழுந்தது பூபதியம்மாவைச் செயற்பாட்டாளராகக் கொண்ட மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணி அந்தப் போராட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் யுத்தத்தை நிறுத்தி சமாதான உடன்படிக்கை செய்ய வேண்டும் என்பதற்காகக் களம் இறங்கி அறப் போராட்டங்களைச் செய்யத் துணிந்தனர்.

தனிப் பெண்ணொருத்தி யார் துணையும் இல்லாமலே உலகத்தையே புரட்டிப் போடும் புரட்சியாளராக உருமாறி வந்தடைந்த உலகத்தில், பெண்களின் கூட்டமொன்றே நல்ல செயல்களுக்காகக் கூடி வந்தால் அதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

குற்றங்களைத் தட்டிக் கேட்டு அதனைத் திருத்தியமைக்கின்ற அன்னையாகச் செயற்பட்டார்கள் பூபதியம்மாவின் குழு அன்னையர் முன்னணி தமக்குள் ஆழ்ந்து ஆலோசித்து இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லி இந்திய அரசுக்கு எதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

உடனடியாகப் போர் நிறுத்தத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும். என்பன அவர்களது கோரிக்கைகள் அமைந்தது. நேர்மையான வழிநின்று தர்மத்திற்குத் துணை போகின்றவர்களை அநேகமானோர் கண்டு கொள்வதே இல்லை. அதே போன்றே அன்னையர் முன்னணியின் கோரிக்கைகளை இந்தியப் படையினர் கண்டு கொள்ளவில்லை.

எல்லோருக்குமே சுயமரியாதை என்பது உண்டு தானே அந்த வகையில் அன்னையர் முன்னணி அவர்களது புறக்கணிப்பைக் கண்டித்து உண்ணா நோன்புப் போராட்டத்தில் அணி திரண்டார்கள் இச்செயல் இந்திய அரசை சிறிதளவு ஆட்டம் காண வைத்திருக்க வேண்டும் அதனாலே தான் 1988 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண அழைப்பினை அனுப்பினார்கள்.

அவர்களை அழைத்து வேறு வழிக்குத் திசை திருப்ப வேண்டும் என்பதே அவர்களது நோக்கமே தவிர முன்வைத்த கோரிக்கைகள் பூர்த்தி ஆக்கப் படவில்லை. இந்திய அரசின் இந்த இளக்காரமான செயலால் அன்னையர் முன்னணி போராட்டத்தைக் கை விடாது தொடர்ந்தனர்.

1988 ஆம் ஆண்டு பெப்ரவரி பத்தாம் திகதி இந்தக் முன்னணியின் நிர்வாகத்தினர் கொழும்பில் வைத்து இந்திய தேசத்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நாடத்தினர். அந்த முயற்சி செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றே எந்த விதமான நன்மையினையும் நல்கவில்லை.

பேச்சு வார்த்தையில் தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த நிலை அன்னையரைப் பொங்கி எழ வைத்து விட்டது. அதனால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தினைத் தொடங்க வேண்டும் என்ற வேதனைக்குரிய முடிவை அனைவரும் எடுத்தனர். அந்தத் தருணத்தில் அனைத்துப் பெண்களும் நான், நீ என்று போட்டி போட்ட வண்ணம் உண்ணா நோன்பில் குதிக்க முன் வந்தனர்.

அதனால் எல்லோரும் ஒரு மனதாக அனைவரது பெயர்களையும் எழுதிக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து முதலில் எடுக்கப்படும் பெயருக்குரியவர் உண்ணா நோன்பு இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்கள். இதனடிப்படையில் முதலில் தேர்வு செய்யப்பட்ட அன்னை அன்னம்மா டேவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் உண்ணா நோன்பு மேற் கொண்ட போது இந்தியப் படையினரால் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டதனால் அவரால் தனது உண்ணா நோன்பை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.

எல்லோரும் இத்தகைய திண்டாட்டத்திற்கு முகங் கொடுத்து அதனை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடிய போது, அனைவருக்கும் திடத்தை உண்டாக்கிப் போராட்டக் களத்தில் இறங்கினார் பூபதியம்மா.

புயலாகப் புகுந்த பூபதியம்மாவைப் படையினரால் அசைக்க முடியவில்லை. தனது போராட்டத்தை 1988 மார்ச் 19 தொடங்கியிருந்தார். செய்கின்ற செயலைத் திருத்தமுறச் செய்ய வேண்டும் என்பதற்கிணங்கப் பூபதியம்மா செயற்பட்டார்.

உண்ணா நோன்பின் போது தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால் தன்னை யாரும் வைத்தியசாலையில் சேர்த்து விடுவார்களோ என அஞ்சிய அன்னை அதற்கும் சில வழிகளை வகுத்து வைத்து விட்டே உண்ணா நோன்பினை எதிர் கொண்டார். முன்னெச்சரிக்கையாக “சுய விருப்பின் பேரில் உண்ணாவிரதம் இருக்கின்றேன்.

எனக்குச் சுய நினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” என்றவாறு அமையும் கடிதமொன்றினை எழுதி வைத்தார். இவர் உண்ணா நோன்பு இருக்கும் போது அவருக்கு வயது ஐம்பத்தாறு என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக வயோதிகப் பருவத்தை எய்திய பருவம் அது உடலில் தளர்ச்சி ஏற்பட்டிருக்கும் அதனை எல்லாம் அவர் பொருட்டாகவே கொள்ளவில்லை உடலில் தளர்ச்சி ஏற்பட்டாலும் உள்ளத்தில் தளர்ச்சி ஏற்படாதவர்.

சாதாரணமாக ஒரு நாளிலேயே நம்மால் உணவை உண்ணாமலோ நீரை அருந்தாமலோ இருக்க முடியாது. அதனை உடலும் தாங்கிக் கொள்ளாது உள்ளமும் தாங்கிக் கொள்ளாது. அது ஒருவகைத் துன்பம் தானே பொதுவாக யாருமே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தம்மைப் பெரிதும் வருத்திக் கொள்வதில்லை. இது இவ்வாறு இருக்க அன்னை மற்றவருக்காகச் செய்த செயல் என்றும் போற்றப்பட வேண்டியது.

நீரை மட்டும் அருந்தி உணவு உண்ணாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இவரது இந்தச் செயல் இந்தியப் படையினருக்கு இளப்பமாக இருந்திருக்கும். 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தொன்பதாம் திகதி வரை அதிலே உறுதியாக இருந்தார். இத்தருணத்தில் இந்தியப் படையினரால் அன்னைக்கு ஏராளமான தடங்கல்கள் உருவாக்கப்பட்டது.

அன்னைக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னையின் பிள்ளைகளில் சிலரையும் இந்தியர்கள் கைது செய்தார்கள். இமையே கருதினாலும் கலங்காதிருக்க வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இருந்து காட்டியவர் அன்னை. முப்பத்தியொரு தினங்கள் உண்ணாவிரத நோன்பு இருந்து 1988 ஆம் ஆண்டு சித்திரை மாதம் பத்தொன்பதாம் திகதி தன் இன்னுயிரை மண்ணுக்காக மனமுவந்து கொடுத்து விட்டு விண்ணுலகம் எய்தினார்.

அன்னை பெண்ணின் பெருமையே மண்ணின் பெருமை என்று சொல்லுவார்கள் அதற்கு உதாரணம் அன்னை பூபதி வீட்டிற்காக மட்டுமே உழைத்த பெண்கள் காலம் மலையேறி நாட்டுக்காக உழைக்கும் காலம் வந்து விட்டது அதற்கு உதாரணம் அன்னை பூபதி உயிரை மாய்ப்பதற்கு நாமெல்லாம் எவ்விதம் அஞ்சுவோம் அஞ்சாத பெண் நெஞ்சத்திற்கு உதாரணம் அன்னை பூபதி….

காலமெல்லாம் இவர் நினைவுகள் மரித்துப் போகாது. அதை மரித்துப் போக விட்டால் நாமெல்லாம் மனிதரேயில்லை. உயிர் உடலை விட்டுப் பிரியும் போது அந்த உடலை தீராத வேதனைக்குள்ளாக்கி விட்டே செல்லுமாம் என்றெல்லாம் படித்திருக்கிறோம்.

அந்த வகையில் அன்னை உணவு அருந்தாமல் இருந்த போது அவர் எத்தகைய துன்பத்திற்கு ஆளாகி இருப்பார். அந்த அன்னையின் உடலில் இருந்து உயிர் பிரியும் போது அந்த ஆத்மா எப்படித் துடித்து இருக்கும். ஒரு தடவையேனும் அன்னை பூபதியை மனதார நினைத்துப் பாருங்கள் நெஞ்சுருகிக் கண்ணில் நீர் வரவில்லை என்றால் நாம் மனிதப் பிறவியே கிடையாது.

அன்னை இறக்கும் வரையில் கூட அவரது கனவு நிறைவேறவில்லையே அவரது ஆத்மா எவ்விதம் சாந்தி அடைந்திருக்கும். மங்கையராகப் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும் என்றான் பாரதி. இந்த தாயகத்தின் தாய் நமக்குக் கிடைக்க நாம் என்ன தவம் செய்தோம் இலங்கை என்ன தவம் செய்தது தாயே பூபதி மாதராகப் பிறக்க மாதவம் நீ செய்தாய் உன்னை அன்னையாகப் பெற மாதவம் இலங்கை செய்தது.

தியாகத்தை தொழிலாக்கி அர்ப்பணிப்பை வாழ்க்கையாக்கி உயிரைச் சுடராக்கிய மகா ஆத்மா அன்னை. அன்னை இறந்த தினத்தை இன்றும் தமிழீழ பற்றாளர் நாள் என்று நினைவு கூறுகின்றனர். அவர் இறந்த சித்திரை மாதப் பத்தொன்பதாம் திகதி அவர் இறந்தார்.

காலங்கள் கடந்து போனாலும் நாமெல்லாம் தொலைந்து போனாலும் என்றுமே அவர் செய்த உயிர்த் தியாகம் உயிர் உள்ளவரையேனும் உள்ளத்தில் உறுதியாக வேரூன்றி நிற்கும் என்பது மகத்தான மறுக்கப்படாத மறக்க முடியாத உண்மை. அன்னை பூபதியின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போமாக அதே சமயம் ஓர் முதிர் வீர மங்கையின் வரலாற்றை ஆவணப்படுத்துவதும் கடமை என்பதையும் நினைவில் நிறுத்துவோம்..

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg