Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவோம்: நல்லிணக்க குழுவின் தலைவர் தெரிவிப்பு

In இலங்கை
Updated: 07:18 GMT, May 9, 2018 | Published: 07:18 GMT, May 9, 2018 |
0 Comments
1112
This post was written by : poovannan

திருகோணமலை இந்துக் கல்லூரியில் கடமையாற்றிய ஐந்து முஸ்லிம் ஆசிரியைகளின் கலாசார ஆடைக்கான தடை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே தேசிய ரீதியாக பரவிவரும் நல்லிணக்கத்துக்கு எதிரான செயற்பாடாகும் என அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுவின் முஸ்லிம் பிரிவிற்கு பொறுப்பான தலைவர் எஸ்.எல்.அசீஸ் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை இந்துக் கல்லூரியில் சர்ச்சையை ஏற்படுத்திய முஸ்லிம் ஆசிரியைகளின் கலாசார ஆடை தொடர்பாக, அம்பாறை மாவட்ட நல்லிணக்கக்குழு நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “திருகோணமலை இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வினை சாதகமாகப் பயன்படுத்திய சிலர் சமூகவலைத் தளங்களிலும் வேறு வழிகளிலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளமை வருந்தத்தக்க விடயமாகும்.

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் போது அதனை அந்தந்த அமைப்பு சார்ந்தோர் சாதுரியமாக தீர்த்துக்கொள்வது எதிர்காலத்தில் நல்லிணக்கத்தை முன்னெடுக்க உதவியாக அமையும்.

இந்த முரண்பாட்டினை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சமயம் மற்றும் சமூகம் சார்பாக பணிபுரியும் அமைப்புகளும் தனி நபர்களும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துவைக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் தங்களது அரசியல்சார் அபிலாசைகளை அடைந்து கொள்ளும் பொருட்டு அறிக்கைகளை வெளியிடாது, நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு வேண்டுகின்றோம்” எனத் தெரிவித்தார்.

திருகோணமலை இந்துக் கல்லூரியில் கடமையாற்றிய முஸ்லிம் ஆசிரியைகளின் கலாசார ஆடை தொடர்பாக, பாடசாலை அதிபர் தலைமையிலான நிர்வாகத்தினர் ஆசிரியைகளும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு, கல்வி அமைச்சின் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுவின் தமிழ் பிரிவிற்கு பொறுப்பான தலைவர் வீ.தங்கவேல், சமாதானமும் சமூகப்பணியும் அமைப்பின் தேசிய இணைப்பாளர் ரீ.தயாபரன் மற்றும் நல்லிணக்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg