Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Special

கத்துக்குட்டியானாலும் கெத்துக்காட்டிய அயர்லாந்து!

உலக விளைாயட்டுக்களில் கிரிக்கெட்டுக்கென்று பெரும் இரசிகர்கள் பட்டாளமே இருப்பது உலகறிந்த உண்மை.

இன்று கிரிக்கெட் போட்டிகளென்றாலே  ரசிகர்கள் அதிக கரிசனை கொண்டிருப்பது ஒரு நாள் மற்றும் ரி-20 போட்டிகளில் தான். என்றாலும் கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்து ஒரு நாட்டு அணி கிரிக்கெட் அந்தஸ்தின் மூலம் தனது பலத்தை நிரூபிப்பதென்றால் அது டெஸ்ட் போட்டிகளையே சாரும்.

5 நாட்கள் தொடர்ந்து ஆடப்படும் இந்த ஆட்டத்தில் தனது பலத்தை நிரூபிக்க அணிகள் கடுமையாகப் போராடுவது உண்மை. அந்த வெற்றி அணியின் அந்தஸ்தை தரப்படுத்தலில் மட்டுமன்றி ரசிகர்களிடை​யேயும் உயர்த்தி வைக்கும்.

டெஸ்ட் அந்தஸ்து

இன்று டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்று 12 அணிகள் உள்ளன. அதில் 2 அணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றன.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 11 ஆவது அணியாகவும், அயர்லாந்து அணி 12 ஆவது அணியாகவும் டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டன.

அத்துடன் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுடனும், அயர்லாந்து அணி பாகிஸ்தானுடனும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட சர்வதேச கிரிக்கெட் சபை முதல் சந்தர்ப்பத்தை வழங்கியது.

அதில் அயர்லாந்து அணி தற்போது டெஸ்டை விளையாடி முடித்துள்ளது.

அயர்லாந்து அணி

அயர்லாந்து அணியைப் பொறுத்த வரையில் பலம்வாய்ந்த பல அணிகளுடன் ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளது. அதில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் எதிரணிகளுக்கு சிம்ம சொற்பனமாக விளங்குவதில் கெட்டிக்காரர்.

அதனைவிட அயர்லாந்து அணி 2007, 2011, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்றிருந்தது. அதில் 2007 இல் முதன்முறையாக பங்கேற்ற அயர்லாந்து பலம்மிக்க அணியாகவிருந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாதித்தது.

அத்துடன் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடிய அயர்லாந்தது, இங்கிலாந்தை வீழ்த்தி தனது பலத்தை நிரூபித்தது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 327 ஓட்டங்களை நிர்ணயித்தது. பதிலெடுத்து ஆடிய அயர்லாந்து 5 விக்கெட்டுகளுக்கு 111 ஓட்டங்கள் என்றிருந்த நிலையில், அதிரடியாக விளையாடிய கெவின் ஓ பிரைனின் சதத்துடன் அயர்லாந்து அணி வெற்றியைப் பெற்று அசத்தியது.

அதே போல் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் பெற்றது. ஆனால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமற்போனது.

இந்நிலையில் 2019 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த அயர்லாந்து அதற்கான தகுதியை இழந்ததுள்ளமை அயர்லாந்து ரசிகர்களுக்கு கவலையளித்துள்ளது.

டெஸ்ட் சாதனை

ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி தோல்விகள் ஒருபுறமிருக்க அண்மையில் அயர்லாந்து அணி தனது முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

டெஸ்ட் தொடரில் பலம் வாய்ந்த அணியாகவுள்ள பாகிஸ்தானுடன் மோதுவதை ஒரு கெத்தாக எடுத்துக்கொண்ட அயர்லாந்து, தனது விடா முயற்சியையும் உத்வேகத்தையும் இந்தப் போட்டியில் வெளிக்காட்டியிருந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவுசெய்தது அந்தவகையில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸை 9 விக்கெட்டுகளை இழந்தவுடன் 310 ஓட்டங்களைப் பெற்று இடைநிறுத்தியது. சகல விக்கெட்டுகளையும் இழக்கும் நிலையிலிருந்து பாகிஸ்தான் தன்னைக் காப்பாற்றிக்கொண்டது எனலாம்.

அயர்லாந்தின் பந்துவீச்சில் முர்தாப் 4 விக்கெட்டுகளையும், தோம்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதோடு ராங்கின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறப்பான பந்துவீச்சின் மூலம் பாக்கிஸ்தானுக்கு சாவாலை நேர்நின்று கொடுத்தது அயர்லாந்து.

தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணி பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட்ட போதும் துடுப்பாட்டத்தில் கொஞ்சம் பதற்றத்துடன் விளையாடியது.

முதல் 7 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து களமிறங்கிய கெவின் ஓ பிரைன் 40 ஓட்டங்கள், வில்சன் 33 ஓட்டங்களென ஆட்டமிழக்க அயர்லாந்து 130 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அயர்லாந்தின் கதி இவ்வளவுதான் என எண்ணியிருந்த நிலையில் தனது 2 ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து புதிய உத்வேகத்தைக் காட்டியது. முதல் இணைப்பாட்டத்தில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்த அயர்லாந்து, அடுத்து அதிரடி வீரரான கெவின் ஓ பிரைனை களமிறக்கியது. அதிரடி காட்டிய பிரைன் சதம் அடித்து தனது துடுப்பாட்டத்தை உலகறியச் செய்தார்.

இந்நிலையில் அயர்லாந்து. 339 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தானுக்கு 160 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.

முதல் மூன்று விக்கெட்டுகளையும் 14 ஓட்டங்களுக்குள் வீழ்த்தி அசத்தியது அயர்லாந்து. எனினும் 5 ஆவது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தப் போட்டி பாகிஸ்தானுக்கு வெற்றியாக அமைந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அயர்லாந்து அணியே வெற்றியாளர்களாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து முதல் போட்டியிலேயே பலமிக்க அணியை போராட வைத்தது என்பதற்காக எனலாம்.

கெவின் ஓ பிரையன்

அதனை விட மற்றொரு பாராட்டு கெவின் ஓ பிரைனுக்குக் கிடைத்தது.

பாகிஸ்தானின் பந்துகளை சரமாரியாகப் பந்தாடிய கெவின் ஓ பிரைன் முதல் டெஸ்டின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அயர்லாந்து கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் சதம் இவரால் பெறப்பட்டது என்ற பெருமையும் வரலாற்றில் இடம்பெற்றது.

இது குறித்து கெவின் தெரிவிக்கையில், ”பாகிஸ்தானுக்கெதிராக சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இனிவரும் போட்டிகளில் மேலும் உத்வேகத்துடன் செயற்படுவோம். நான் இங்கிலாந்துக்கு எதிராக உலகக் கிண்ணக் போட்டியில் அடித்த சதமே என் வாழ்க்கையின் முக்கியமான திருப்பமாக அமைந்தது” என்றார்.

இனிவரும் காலங்களில் பலமிக்க அணிகளுடன் மோதி அயர்லாந்து அணி தனது பலத்தை வெளிக்காட்ட உத்வேகத்துடன் உள்ளது என்பதையே பாகிஸ்தானுடனான போட்டியில் அந்த அணி கூறியிருக்கிறது.

உண்மையில் பலம் வாய்ந்த அணிகளுடன் மோதுவது என்பதை சவாலாக ஏற்று தனது பலத்தை நிரூபிக்க அயர்லாந்து அடியெடுத்து வைத்துள்ளது என்பதை ரசிகர்களும் வரவேற்றுள்ளனர்.

அவ்வாறே ‘விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி’ என்பதற்கிணங்க உலகின் பலமிக்க அணியாக விளங்கி ரசிகர்களிடையே நம்பிக்கை அணியாகத் திகழ ரசிகர்கள் சார்பில் வாழ்த்துகின்றோம்.

ஆக்ரோஷ அதிரடி காட்டி எதிரணிக்கு ஆட்டம் காட்டும் இளம் புயல் – இந்திய அணியில் ஒதுக்கப்பட்டது ஏன்?

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பது உண்மைதான்! – மிரட்டும் குள்ள இராட்சதன்

திடல்

கத்துக்குட்டியானாலும் கெத்துக்காட்டிய அயர்லாந்து!

கத்துக்குட்டியானாலும் கெத்துக்காட்டிய அயர்லாந்து!

ஆக்ரோஷ அதிரடி காட்டி எதிரணிக்கு ஆட்டம் காட்டும் இளம் புயல் – இந்திய அணியில் ஒதுக்கப்பட்டது ஏன்?

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பது உண்மைதான்! – மிரட்டும் குள்ள இராட்சதன்

இலங்கையின் பரிதாப நிலையும், இந்தியாவின் சாதனைக்கு காரணமும்!

இனிமேல் இப்படி தான்: கர்ச்சிக்கும் ஹத்துரு சிங்க(ம்)